shadow

மருத்துவமனை முதல் மரணம் வரை. ஜெயலலிதா சிகிச்சை குறித்த கவர்னரின் அறிக்கை

ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றமும் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதுவரை கசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடையும் வரை அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் உள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சையின் காரணமாக உடல்நலம் தேறி வந்த அவர்,அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.அதன் பின்னர் 50 நாட்களாக மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக,அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.இதனால் அவர் சாதாரண தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மாற்றப்பட்டார்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நான் மும்பையில் இருந்தேன்.அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.எனவே உடனடியாக நான் சென்னை திரும்பினேன்.அதி நவீன மருத்துவ தொழில்நுட்பமாக கருதப்படும் ’எக்மோ’ கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எனக்கு கூறப்பட்டது.

ஆனால் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவர்,கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply