ku6

ஸ்ரீரங்கத்தில் வசித்த கோபால பட்டர் ரங்கநாதரின் தீவிர பக்தர். தினமும் கோயிலுக்கு வந்து பகவத்கீதை பாராயணம் செய்வார். ஸ்லோகங்களை தப்பும் தவறுமாக படிப்பார். வார்த்தைகளை விட்டுவிடுவார். கோயிலுக்கு வரும் பாமரர்கள் ஸ்லோகங்கள் தெரியாததால், கோபாலபட்டரை மிகுந்த திறமைசாலி என நினைத்து பாராட்டி செல்வார்கள். அதேநேரம் பண்டிதர்கள் கீதையை சிதைத்து பாராயணம் செய்வதைக் கண்டு பட்டரைக்கண்டிப்பார்கள். ஆனால், பட்டரோ தன் கடமையில் கண்ணாய் இருந்தார். இந்த பாராயணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என பண்டிதர்கள் முடிவு செய்தனர். பட்டரைக் கேலி செய்தனர். அவர் அடங்கவில்லை. கற்களை வீசி எறிந்தனர். கண்டுகொள்ளவே இல்லை. தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மசியாத பட்டர் பாராயணத்தை துவங்கிவிட்டால் அதிலேயே மூழ்கிப் போய் விடுவார். ஒருசமயம் வங்காளத்தின் பெரும் பண்டிதரான கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்கத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது.

பண்டிதர்கள் அவரை வரவேற்க தயாராயினர். இந்த சமயத்தில் கோபாலபட்டர் ஏதாவது தப்பும் தவறுமாக உளறினால் சைதன்யர் கோபித்துக் கொள்வாரே என்று கலங்கவும் செய்தனர். கோபால பட்டரோ இதைப்பற்றி ஏதும் அறியாமல் வழக்கம்போல் கீதையை பாராயணம் செய்து கொண்டிருந்தார். அவரை பண்டிதர்கள் சந்தித்து, ஓய் பட்டரே! இன்று மட்டும் நீர் வடக்கு வாசல் பக்கமாக உட்கார்ந்து உமது உளறலை வைத்து கொள்ளும். வருபவர் பெரிய மகான். உம் உளறலைக் கேட்டால் கொதித்து விடுவார், என பயமுறுத்தினர். பட்டர் இதற்கெல்லாம் கலங்குபவரா என்ன? அவர் அசைய மறுத்தார். அவர் காலில் விழாக்குறையாக கெஞ்சி, ஒரு வழியாக வடக்கு கோபுர வாசலுக்கு அவரை பண்டிதர்கள் அனுப்பிவிட்டு மூச்சு விட்டனர். சைதன்யர் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது, பட்டர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். நாதஸ்வரம், பிற இசைக்கருவிகள் ஓங்கி ஒலித்தன. இத்தனைக்கும் மத்தியிலும் சைதன்யரின் காதில், எங்கிருந்தோ கீதையின் ஸ்லோகங்கள் விழுந்தன. அவர் உணர்ச்சிவசப்பட்டார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு குரல் வந்த வடக்கு கோபுர வாசலுக்கு விரைந்தார்.

 பண்டிதர்கள் கலங்கினர். என்னாகப் போகிறதோ என மனம் படபடத்தனர். கோபாலபட்டரை சைதன்யர் ஏதாவது ஒரு வழி செய்துவிடுவார் என்றே எண்ணினர். ஆனால், நினைத்ததற்கு மாறாக சைதன்யர் பட்டரைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் பெருக நின்றார். அவரிடம், பட்டரே! தாங்கள் கீதையை பாராயணம் செய்வதில் மகிழ்கிறேன். ஆனால், தப்பும் தவறுமாக ஏன் சொல்கிறீர்கள்? என கேட்டார். சைதன்யரே! என் வாய் தானாக குளறவில்லை. கீதையை கையில் எடுத்தவுடனேயே பகவான் கிருஷ்ணன் என் கண் முன்னால் வந்துவிடுகிறார். அவர் அருகே அர்ஜுனன் தேரில் நிற்கிறான்.  இந்த அரிய காட்சியை பார்க்கும்போது ஆனந்த மிகுதியால் எழுத்துக்கள் தடுமாறுகின்றன. வாய் குளறுகிறது. அதனால் தவறாகப் படிப்பது போல் ஒரு தோற்றம் உருவாகிறது, என்றார். பட்டரின் பக்தியை மெச்சிய சைதன்யர் அவரை கட்டித் தழுவிக் கொண்டார். அதைப் பார்த்த பண்டிதர்களும் கோபாலபட்டரின் பாதங்களில் விழுந்து தங்களை மன்னிக்க வேண்டினர். யார் ஒருவன் கீதையில் கண்ணனைக் காண்கிறானோ அவனே கீதையை பாராயணம் செய்யத் தகுதியுள்ளவன் என்றார் சைதன்ய மகாபிரபு.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *