ஆலந்தூர் ஆசர்கானாவில் ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் தருணத்திலும் பயணிகள் உயிரை பெரிதாக மதித்த டிரைவரின் செயல் பெரும் நெகிழ்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியைச்சேர்ந்தவர் சம்பத் (வயது 45). தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்களை ஏற்றிக்கொண்டு மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு பஸ்சை ஓட்டி வந்தார்.

விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு, மற்றொரு விமானத்தில் வந்த விமானி மற்றும் பணிப்பெண்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் எழும்பூரில் உள்ள ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
பஸ் வந்தபோது நெஞ்சு வலிப்பதாக பஸ்சில் இருந்த கிளீனரிடம் கூறி தண்ணீர் கேட்டார். தண்ணீர் குடித்ததும் நெஞ்சு வலி குறைந்ததால் பஸ்சை மீண்டும் ஓட்டிச்சென்றார். பஸ் ஆலந்தூர் ஆசர்கானா அருகே வந்தபோது சம்பத் மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
ஒரு கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் பஸ்சை இயக்கி சாலையோரம் நிறுத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த விமானி மற்றும் பணிப்பெண்கள் ஓடி வந்து பார்த்தபோது பஸ்சின் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுபற்றி பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply