shadow

பத்மநாபசாமி கோவிலில் 186 கோடி மதிப்புள்ள தங்க பானைகள் மாயம். அதிர்ச்சி தகவல்

templeகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நாணயங்கள் அடங்கிய பானைகள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரே நாளில் உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாக மாறியது. ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் பொக்கிஷங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு அன்றைய நாள் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும், கோயிலை ஆய்வு செய்ய நீதிமன்ற ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய ஆய்வில் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது.

அதன்படி, 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது. தணிக்கையை முடித்து, ஆயிரம் பக்க அறிக்கையை ( தொகுதிகளாகவும், 5 பகுதிகளாகவும்) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில்தான் ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘பத்மநாபசாமி கோயிலில், 1,988 தங்க பானைகள் இருந்தன. அவற்றில், அரண்மனையின் ஆபரண தேவைகளுக்கு உருக்குவதற்காக 822 தங்க பானைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மீதி 1,166 பானைகள் இருக்க வேண்டும். ஆனால், 397 பானைகள்தான் உள்ளன. 769 தங்க பானைகளை காணவில்லை. அவற்றின் எடை மொத்தம் 776 கிலோ இருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.186 கோடி ஆகும்.

உண்டியல் காணிக்கை மூலம் 572 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 589 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 78 ஆயிரம் ஆகும். ஆனால், அவை ‘நாடவரவு’ பதிவு புத்தகத்தில் வரவு வைக்கப்படவில்லை. 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாதாள அறை ‘பி’யில் இருந்து 22 பிரமாண்ட வெள்ளிக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. அவற்றில் 16 கட்டிகள், புனரமைப்பு பணிக்காக அளிக்கப்பட்டன. ஆனால், மீதி 6 வெள்ளிக் கட்டிகள் இருப்பதற்கு பதிலாக, 5 கட்டிகள்தான் உள்ளன. மாயமான ஒரு வெள்ளிக் கட்டியின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

கடந்த 1970-ம் ஆண்டு, கோயிலுக்கு சொந்தமான 2.11 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதுபற்றிய ஆவணங்கள் எதுவும் கோயிலில் இல்லை. எனவே, அது சட்டவிரோத விற்பனையாக இருக்கலாம். கோவில் ஆபரணங்கள் செய்யும் வேலைக்காக ஒப்பந்ததாரர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொடுக்கும்போது, அவற்றின் எடை மற்றும் தூய்மையை பரிசோதிக்க கோயிலில் வசதி இல்லை.

ஒப்பந்ததாரர்களிடம் மிஞ்சிய ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் திரும்பப் பெறப்படவில்லை. அதுபோல், காணிக்கையை எண்ணுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காணிக்கை பதிவேடுகளை காணவில்லை. மேலும், கோயில் நிர்வாகத்தில் செலவுகள் திடீரென அதிகரித்துள்ளன. இது, இயல்புக்கு மாறானதாக இருக்கிறது. நிதி முறைகேடுகளும், ஊழலும் நடந்து வருகின்றன. எனவே, இந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த ஒரு கமிட்டியை அமைக்கலாம்.

மேலும், கோயிலை நிர்வகிக்க 7 பேர் அடங்கிய ஒரு கமிட்டியை அமைக்கலாம். அதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும், திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும், திருவாங்கூர் தேவசம் போர்டு பிரதிநிதி ஒருவரும், கோவில் தந்திரியும், 2 முக்கியஸ்தர்களும், கேரள அரசு நியமிக்கும் ஒரு நிர்வாக அதிகாரியும் இடம்பெற வேண்டும். அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக இருக்க வேண்டும். அந்த கமிட்டியே கோயிலின் வருடாந்திர பட்ஜெட்டை நிறைவேற்றலாம். கோயிலுக்குள் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடலாம். கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பெருமளவில் மாற்றங்களை செய்ய வேண்டும். விலை மதிப்பற்ற பொருட்களை நவீன அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்’

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply