shadow

நரகாசுரன் படத்தில் இருந்து விலக தயார்: கவுதம் மேனன் அறிக்கை

கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன் மற்றும் செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய திரைப்படங்களில் ரிலீஸ் தாமதத்திற்கு அந்த படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம்மேனன் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கவுதம் மேனன் தனது நீண்ட அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பல நேர்மறையான விஷயங்கள் நரகாசூரன் படத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்த வேளையில் எனது இயக்குநர் கார்த்திக் நரேன் பதிவேற்றிய ட்வீட் ஒன்று என்னை சங்கடப்படுத்தியது. அதை நான் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் பல ஊடகங்கள் என்னை தொடர்பு கொண்டது என்னை வருத்தப்படவைத்தது. தொடர்ந்து நான் அவருக்கு ஒரு பதிலளித்தேன். இப்போது யோசித்துப் பார்த்தால் அதை நான் செய்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. இதற்காக கார்த்திக்கிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அது எனக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகள், படத்தின் மீது விழுந்த தேவையில்லாத கவனம், ஏதோ ஒன்று தவறாக இருக்கிறதோ என்ற அனுமானம் ஆகியவற்றுக்கு நான் தந்த எதிர்வினையே தவிர கார்த்திக்குக்கு அல்ல. படத்தை விரைவில் வெளியிட நடந்துகொண்டிருக்கும் பல வேலைகளுக்கு இது ஒரு பின்னடைவே.

நரகாசூரன் படத்தின் தயாரிப்பின் போது நான் எதிலும் தலையிட்டதில்லை. ஏன் கார்த்திக் நரேனிடம் ஸ்கிரிப்ட் பற்றி பேசியதில்லை. எனது குழுவுக்கும், படத்துக்கு முதலீடு செய்ய வந்தவர்களுக்கும் நான் சொன்னது, கார்த்திக்குக்கு என்ன தேவையோ அதைக் கொடுங்கள் என்பதே. அவரை சுதந்திரமாக செயல்படவிட்டோம். அவர் கேட்ட நடிகர்களை, அதிக சம்பளத்தில், நடிக்க வைத்தோம். ட்ரெய்லர், டீஸர், போஸ்டர் என அனைத்தையும் அவர் மட்டுமே முடிவு செய்தார்.

ஏன் சமீபத்தில் மாசிடோனியா நாட்டில் படத்துக்கான பின்னணி இசையை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்றார். நாங்கள் அதை நடத்திக் காட்டினோம். இந்தப் படத்துக்கு முதலீடு செய்தவர்கள் மூலம் இந்தப் படத்துக்காக நாங்கள் நிறைய செலவழித்துள்ளோம். அதற்கு நான் பொறுப்பு. இந்த பணத்தை இன்னொரு படத்துக்கு செலவிடும் அளவு இதன் வியாபாரம் பெரியதல்ல. துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு அளவு இதை விட 7 மடங்கு பெரியது, அதை தயாரிப்பவரும் வேறொருவர். நான் நரகாசூரன் படத்தின் லாபத்தில் 50 சதவீத பங்கை கேட்கவில்லை.

அந்தப் படத்தில் எனக்கு எந்த பங்கும் கிடையாது என்பது எனக்குத் தெரியும். இந்தப் படத்திலிருந்து நான் வெளியேற வேண்டும் என்று கார்த்திக் நினைத்தால் அது எனக்கு மகிழ்ச்சியே ஏனென்றால் அப்போது அந்தப் படம் என்னுடைய பொறுப்பில் இருக்கப் போவதில்லை.

சிலர் சுயநலம் கருதி பரப்பும் தவறான தகவல்களாலும், சந்தை எப்படி இருக்கிறது என்பது பற்றிய தவறான புரிதலாலும்தான் கார்த்திக் தன்னை இப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. யாராலும் ஒரு படத்தின் வெளியீடை தடுக்க முடியாது. படத்தை வெளியிடாமல் வைத்திருக்கு நாங்கள் படத்தை எடுப்பதும் இல்லை. துருவ நட்சத்திரம், எனை நோக்கிப் பாயும் தோட்டா, இரண்டு படங்களுக்கும் ஒரு பயணம் இருக்கிறது.

படத்தின் நடிகர்கள் தந்த தேதியில் மட்டும்தான் நாங்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். துருவ நட்சத்திரத்துக்கு இதுவரை 70 நாட்கள் தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு 45 நாட்கள் நடந்துள்ளது. இரண்டுமே பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய பொருட்செலவும் நிறைந்த படங்கள். இரண்டும் இந்த வருடம் வெளியாகும். இரண்டுமே வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் படங்கள்.

துருவ நட்சத்திரம் படத்தைப் பொருத்தவரையில் நீண்ட படப்பிடிப்பும், நிறைய சண்டைக்காட்சிகளும் படம் பிடிக்க வேண்டியுள்ளது. அது குறுகிய காலத்தில் முடிக்கக் கூடிய படமல்ல. நடிகர்களின் தேதிகளைத் தாண்டி இரண்டு படங்களைச் சார்ந்து வேறெந்த பிரச்சினைகளும் இல்லை.

இயக்குநர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதையை கேட்டு அதை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனிடம் கொண்டு போய் சேர்த்ததைத் தாண்டி அந்தப் படத்தில் என் பங்கு எதுவுமில்லை. நான் அதை தயாரிக்கவுமில்லை, வேறெந்த விதத்திலும் எனக்கு அந்தப் படத்தில் சம்மந்தமில்லை. எனது பெயரை போஸ்டர்களில் போட வேண்டும் என்று மதன் விரும்பினார். இனி அதிலும் எனது பெயர் இருக்காது.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ஆரம்பிக்க முனைந்தது மட்டுமே நான். அதற்கு எனது பெயர் போஸ்டரில் இருக்க வேண்டிய அவசியமில்லை. செல்வராகவனை ஒரு இயக்குநராக, படைப்பாற்றல் மிக்கவராக நான் மதிக்கிறேன். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. விரைவில் வெளியாகும்.

Leave a Reply