shadow

tirumala_1-e1345825341125

திருப்பதியில் நடக்கும் முக்கியத்திருவிழா பிரம்மோற்ஸவம்.இவ்விழாவில் ஐந்தாம் நாள் வைபவமாக கருடசேவை நடக்கிறது. இந்த விழாவை காண 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். புரட்டாசி மாதத்தில் நவராத்திரியை ஒட்டி இந்த விழா நடத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இந்த விழா இரண்டுமுறை நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தில்முந்தைய நாள் தேவர்களையும், முனிவர் களையும், பக்தர்களையும் விழாவிற்கும் அழைக்கும் அங்குராப்பணம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் முதல் நாள் அன்று மாலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். அன்று இரவு 9மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வருவார். மறுநாள் காலையில் சிறிய சேஷ வாகனத்தில் உலாவும், இரவில் ஊஞ்சல் சேவையும், ஹம்ச (அன்னம்) வாகனத்தில் பவனியும் நடக்கும்.

மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் பவனியும், இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் பவனியும் இரவில் சர்வபூபால வாகனத்தில் பவனியும் நடக்கும். ஐந்தாம் நாளே மிக முக்கியமான கருடசேவை தினமாகும். அன்று காலையில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலா வருவார். இரவில் கருடவாகனத்தில் வரும் மலையப்பசுவாமியைக் காண கண் கோடி வேண்டும். இந்த தரிசனம் கிடைக்க வேண்டுமானால் பகல் 2 மணிக்கே கோயிலைச் சுற்றி உள்ள காலரிகளில் அமர்ந்து விடுவது நல்லது. நள்ளிரவு 1மணிவரை கருட சேவை நடக்கும். கருடசேவையின் போது மூலவருக்கு அணியப்படும் லட்சுமி ஆரத்தை உற்சவரே அணிந்து வருவார். எனவே, மூலவரே வெளியே வந்ததாக கருதி சிறிது நேரம் நடை அடைக்கப்படுவது வாடிக்கை. இந்த தரிசனத்தை பார்த்து விட்டால் வெங்கடாசலபதியை காண வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறாம் திருவிழா அன்றுகாலையில் அனுமான் வாகனத்தில் பவனியும், மாலை 5மணிக்கு தங்கத்தேர் உலாவும், இரவில்  யானை வாகன பவனியும் நடக்கும். ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் சூரியபிரபை வாகனத்தில் பவனியும், இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பவனியும் நடக்கும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கும். இரவில் குதிரை வாகனத்தில் பவனி நடக்கும்.

கடைசி நாளான ஒன்பதாம் திருவிழாவில் காலை 5மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். 8 மணிக்கு சக்கர ஸ்நானம் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல, கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரியமலையையே பெயர்த்து வந்த கருடனைக் கவுரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்கவரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே, தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.

Leave a Reply