shadow

p16

 

ங்கையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவம். அதன் புண்ணிய வரலாற்றில், பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரிகப் பெருமைகளையும், ஆன்மிகப் பண்பு களையும் அறியலாம். அதன் ஓட்டத்தில் புராதன நிகழ்ச்சிகளையும், புராணக் காட்சிகளையும் காணலாம்.

கங்கையின் தூய நீரில், மகரிஷிகளின் தூய உள்ளங்களைத் தரிசிக்கலாம். அதன் ஆழத்தில், ஞானிகளின் சலனமற்ற மன நிலையை உணரலாம். அதன் வேகத்தில், கவிஞனின் கற்பனாசக்தியை அளவிடலாம். அதன் சலசலப்பில், கலைஞனின் இதயத் துடிப்பைக் கேட்கலாம்!

கண்காணா இடத்தில் பிறந்து, காண முடியாத இடங்களிலெல்லாம் பாய்ந்தோடி, கரை காணா கடலில் கலக்கும் அதன் புனிதப் பயணத்தை நினைக்க நினைக்க, பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, கோடி சிறுகதைகள் இணைந்து கோலமிகு தொடர்கதையாக அது வளர்வதையும், புண்ணிய பாரதத்தின் ஜீவ நாடியாக அது திகழ்வதை யும், நம் ஆத்ம கீதத்தின் ஆதார சுருதியாக இயங்குவதையும் உணர முடியும்.”

p16c

வர்ண ஜாலம் புரியும் அவருடைய வர்ணனைகளைப் படிக்கும்போது, கங்கையில் மூழ்கி எழும் உற்சாகமும் உவகையும் நம் மனத்தை ஆக்கிரமிக்கின்றன. வாருங்கள்,  கங்கையை மேலும் சற்றுத் தெரிந்துகொள்ளலாம்…

”ரிஷிகேசத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது லட்சுமண ஜூலா. கங்கையின் மீது அந்தரத்தில் தொங்கியபடி ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பாலம் இது. பாலத்தைக் கடந்து, கங்கையின் இடக் கரையில் ஸ்ரீஆதிசங்கரர் மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்துக்கு எதிரே இருக்கும் கங்கைப் படித்துறைக்கு ‘லட்சுமண குண்டம்’ என்று பெயர்.

அங்கு நின்று சுற்றுப்புறக் காட்சியைப் பார்க்கும்போது, இயற்கை அன்னை நடத்தும் பேராட்சியின் மாட்சியை உணர முடிகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைத் தொடர்ச்சிகள். வாரிக் கொண்டு வரும் வளத்தால் நம் உடலை வளர்த்து, தேடிச் சேர்த்த புனிதத்தால் நம் உள்ளத்தை உயர்த்தி, பிறர் வாழ தாம் பிறவியெடுக்கும் பெருந்தகையைப்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது கங்கையின் பிரவாகம்.

ரிஷிகேசத்திலிருந்து தெற்கே பதினைந்து மைல் பயணித்தால் ஹரித்துவாரம். இமய மலையில் பிறக்கும் கங்கை, முதன்முதலாக சமவெளியில் பாயத் தொடங்கும் அந்தப் புனித இடம், கேதார்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் பயணம் தொடங்கும் நுழைவாயில். அதனால், அதை ஹரத்துவாரம் என்றும், ஹரித்துவாரம் என்றும் அழைக்கிறார்கள்.

p16d

இமாலயத்தில் நாம் உயரே போகப் போக, ஹரித்துவாரத்திலும் ரிஷிகேசத்திலும் நம்முடன் பழகிப் பேசிய கங்கை, மெள்ள மெள்ள ஒதுங்கி, பதுங்கி ஓடத் தொடங்குகிறாள். பள்ளத்தாக்கு களில் பாறைகளுக்கிடையே நுழைந்தும், மரங்களுக்கிடையே மறைந்தும் அவள் பாய்ந்து வரும் காட்சி, சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதை நினைவுபடுத்தும்.

கடியாலாவில் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு எதிரில் கங்கை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், நூறு அடி இறங்கிச் சென்றால்தான், அதன் கரையை அடைய முடியும்.

சுற்றிலும் மலைப் பாறைகள். அதன் மத்தியில் கங்கை ஓடி வருகிறது. பாறையில் மோதி, அதன் ஓட்டம் தடைப்பட்டு, திசைமாறி அங்கேயே சுழன்றுகொண்டிருப்பதால், அது சக்கர தீர்த்தம் போலிருக்கிறது.

மானுடரின் பாவங்களைக் கரைத்து, விமோசனம் தந்தருள வானுலகிலிருந்து கீழிறங்கி வந்து, தன்னலம் கருதாது, கைம்மாறு எதிர்பாராது, கருணையுடன் கடமையாற்றி, ஓய்ச்சல் ஒழிவின்றி ஓடி, மூலை முடுக்குகளில் எல்லாம் தேடித்தேடி தன் மக்களைக் கரையேற்றுவதாலேயே அவள் புனித கங்கை ஆகின்றாளோ! நாடு முழுவதும் பாய்ந்தோடும் நதிகளிலெல்லாம் அவள் கலந்திருப்பதால், இது புண்ணிய பாரதம் ஆகின்றதோ!

தென் கோடியிலிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார், இமாலயத்திலுள்ள திவ்விய தேசங்களைத் தரிசிக்க வந்தபோது, தேவப் பிரயாகையின் இயற்கை வனப்பில் மனத்தைப் பறிகொடுத்து, அங்கு உறையும் புருஷோத்தமனின் பக்தியில் கரைந்துருகி, தீந்தமிழ்ப் பாசுரங்களால் பாமாலை

சூடியிருக்கிறார். அந்தப் பத்துப் பாசுரங்களை ஓதுபவர்கள், தினமும் திருமாலின் திருவடி தொழுது, அத்திருவடிக்குக் கீழே பாயும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பலனைப் பெறலாம் என்று பலஸ்ருதியில் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு பாசுரத்திலும் முதல் இரண்டு அடிகளில் புருஷோத்தமனின் கீர்த்தியையும், பின்னிரண்டு அடிகளில் கங்கையின் மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார் அவர்.

இரண்டாவது பாசுரத்தில்…

‘நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத்துழாயும்
கலந்து இழிபுனலால் புகர்படு கங்கை’

– என பாகீரதி- அலகநந்தா நதிகளின் சங்கமத்தின் தத்துவத்தைக் கவிநயத்துடன் அனுபவிக்கிறார். சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயண மூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசியும் அங்கு கலக்கிறதாம். அந்தப் புண்ணியத் தின் பிரவாகம் எழில்மிகு கங்கையாகப் பாய்கிறதாம்.

சரி! கங்கையின் வேகம் எப்படி? அதைப் பெரியாழ்வார் திருமொழியிலேயே கேட்போம்.

‘தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரைமரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கருத்து இழிகங்கை’

அப்பப்பா… அது என்ன வேகம்!

அது என்ன முரட்டுப் பிரவாகம்!

அதன் ஓட்டத்தைக் கண்டு, பெரிய பெரிய மலைகளெல்லாம் நடுங்குகின்றனவாம்; பூமியே பிளந்து உள்ளே விழுகிறதாம்; கரையிலுள்ள மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து, நீரில் அடித்துக் கொண்டு போகின்றனவாம்; கடலையும் குழம்பச் செய்யும் வேகத்துடன் கங்கை ஓடி வருகிறதாம்.

மற்றொரு பாசுரத்தில், ‘கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை’ என்று வர்ணித்து, அக்காலத்தில் கங்கைக் கரை முழுதும் யாகம் வளர்த்த தவச் சீலர்கள் மண்டிக்கிடந்த மாட்சியைக் கூறுகிறார்.

‘எழுமையும் கூடி ஈண்டிய பாவம்
இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கை’

– என்று கூறி, ‘நாம் ஏழேழு பிறவியிலும் சேர்த்துக்கொண்ட பாவங்களை ஒரே நொடியில் அகற்றும் ஆற்றல் கொண்டது கங்கை’ என்று மிக உறுதியோடு நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.”

பாகீரதியாம் கங்கை குறித்து பரணீதரன் வியந்ததையும் விவரித்ததையும் படித்தீர்களா? ஆமாம்! கங்கை வெறும் நதி அல்ல; தெய்விகமாகப் போற்றப்படும் அன்பு அன்னை அவள். அவளுடைய கரையோரம் வாழ்ந்து கொண்டிருக்கும் 500 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்பவள்.

ஆன்மிகம் துவங்கி விவசாயம் வரையிலும், குடிநீர்த் தேவை துவங்கி மோட்சப்பேறு வரை யிலும் இந்திய மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பின்னிப் பிணைந் திருப்பவள் அவள். தன்னுள் மூழ்கி எழும் ஒவ்வொருவரின் கடந்த கால பாவங்களையும், கர்ம வினைகளையும் களையக்கூடியவள் கங்கை. ஆன்ம விடுதலை நோக்கிய அவர்களுடைய பாதையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்திக் கொடுப்பவள்.

கங்கை ஜலத்தை சிறு குடுவையில் பத்திரப் படுத்தி வைத்துப் பூஜிக்காத இந்து இல்லங்கள் அரிது. பிணி தீர்க்கும் மாமருந்தாகக் கருதப்படும் கங்கை நீரை நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்குக் கொடுப்பது உண்டு. எந்த ஓர் இடத்தை, பொருளைத் தூய்மைப்படுத்தவும் கங்கை நீரைப் பயன்படுத்துகிறோம். சாதாரண நீரில் ஒரு சொட்டு கங்கை ஜலம் கலக்கப்பட்ட உடனேயே, மொத்த நீரும் புனிதமடைந்து, சக்தியும் வீரியமும் மிக்கதாகிவிடுகிறது.

மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் ஒரு துளி கங்கை ஜலம் விடப்பட்டால், அவருடைய கடந்த கால பாவங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. அதே காரணத்தால்தான், இறந்தவரின் அஸ்தியை கங்கை நீரில் கலப்பதற்காக நீண்ட நெடுந்தூரம் பயணிக்கிறோம். இறந்தவரின் ஆன்மா அமைதியாகவும், சலனமில்லாமலும் இந்த உலகை விட்டு அகலச் செய்கிறது கங்கை நீர். கங்கை நதியோரம் தங்களது கடைசி மூச்சு அடங்கவேண்டும் என்பதற்காகவே நிறைய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வது உண்டு.

கர்ம வினைகளை நீக்கும் சக்தி ஒருபுறமிருக்க, கங்கை உணர்த்தும் நல்வினைகளுக்காகவும் அவள் போற்றிப் பாராட்டப்படுகிறாள். இந்திய மக்களுக்கு ஆன்மிக, கலாசார மையமாகத் திகழ்வதுடன், தனது கரையோரம் வாழ்பவர் களுக்கு வாழ்வாதாரமாகவும் திகழ்கிறாள் கங்கை. இந்தப் புனித நதி பாயும் கரையோரங்களில் முப்பது நகரங்களும் எழுபது சிறு நகரங்களும், ஆயிரக்கணக்கில் கிராமங்களும் இருந்து வருவதாகத் தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம்.

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கங்கை ஓர் வரப்பிரசாதம். நெல், கரும்பு, உருளை, பருத்தி போன்ற பலவற்றை கங்கை நீரின் உதவியுடன் பயிரிட்டு வருகிறார்கள்; பசு, ஆடு போன்று பல்வேறு கால்நடைகளைப் பராமரித்து வருகிறார்கள்.

தவிர, நூற்றுக்கணக்கான மீனவ சமூகத் தினருக்கு வருமானம் ஈட்டவும், வயிறு நிரப்பவும் மூலாதாரமாகத் திகழ்கிறாள் கங்கை. அதேபோல், கங்கை நதியோரம் பயிரிடப்படும் செடிகளில் இருந்து அபூர்வ மருந்து வகைகளும் நமக்குக் கிடைக்கின்றன.

நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமின்றி, விஞ்ஞானப் பூர்வமாகவும் கங்கை நீரின் தனித்தன்மை நிரூபிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. காலரா நோய்க்குக் காரணமான பாக்டீரியாவை கங்கை நீரின் உதவியுடன் மூன்று மணி நேரத்துக்குள் உயிரிழக்கச் செய்துவிட முடியும் என்பதும், அதே பாக்டீரியா, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 43 மணி நேரத்துக்கும் மேலாக உயிருடன் இருக்கும் என்பதும் 1896-ம் வருடத்திலேயே கண்டறியப்பட்டது!

1927-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி, நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் காலரா காரணமாக இறந்துவிட்ட உடல்கள் மிதக்கும் கங்கையின் பகுதியைக் காணும்போது, அங்கே கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றும். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கங்கையின் மேற்பரப்புக்கு சில அடிகள் கீழேயிருந்து எடுக்கப்பட்ட கங்கை நீரில் கிருமிகள் எதுவுமே இல்லையாம். எத்தனை நாள் சேமித்து வைக்கப்பட்டாலும், கங்கை நீர் கெடுவதில்லை என்பது அதன் இன்னொரு சிறப்பு. இதற்குக் காரணம், ஆக்ஸிஜனைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கங்கை நீருக்கு மிக மிக அதிகம். இன்னும் சொல்லப்போனால், உலகிலுள்ள எந்த நதிநீரைவிடவும், கங்கை நீருக்குப் பிராண வாயுவைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை 15 முதல் 25 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

த்தனை பெருமைமிக்க புனித கங்கையின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

ஒவ்வொரு நாளும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து 1.3 பில்லியன் லிட்டர் மாசு கலந்த தண்ணீர், கங்கை நதியில் நேரடியாகக் கலக்கப்படுகிறது.

கங்கையிலும், அதன் கிளை நதிகளிலும் கரையோரம் ஏராளமான குப்பைகள்

குவிந்துகிடக்கின்றன. மக்களின் அலட்சியப்போக்காலும், பலத்த மழை காரணமாகவும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீரிலிருந்து பிராண வாயு அதிகம் உறிஞ்சப்படுவதால், மீன்களும் டால்ஃபின் களும் இறந்துவிடுகின்றன.

இப்படி விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாகவும், கங்கையின் புனிதத்தைக் காப்பதில் நமக்கெல்லாம் ஒர் உந்துதலாகவும் செயல்பட்டுவருகிறது,  சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையில் இயங்கும் ‘கங்கா ஆக்ஷன் பரிவார்’.

ரிஷிகேசத்தில் இயங்குகிறது கங்கா ஆக்ஷன் பரிவார். இந்த அமைப்பு, 2010-ம் வருடம் ஏப்ரல் 4-ம் தேதி, ரிஷிகேசத்தில் பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் துவங்கப்பட்டது. துவக்க விழாவில் தலாய்லாமா, சிதானந்த் சரஸ்வதி, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

மரங்களை விருட்ச தேவதைகளாகவும், காடுகளை வன தேவதைகளாகவும், மலைகளை கிரி தேவதைகளாகவும் நாம் வணங்குகிறோம். அதேபோல், நதிகளை தேவியர்களாகப் போற்றுகிறோம். நீரானது நம்மைப் புனிதப்படுத்துகிறது என்று நம்புகிறோம். ஆனால், திருக்கோயிலுக்குள் புனிதமான கங்கா மாதாவை தெய்வமாக வழிபடும் நாம், கோயிலுக்கு வெளியே நதியுருவில் பாய்ந்தோடும் கங்கையில் பிளாஸ்டிக் பைகளையும், இதர ரசாயனக் கழிவுகளையும் வீசியெறிந்து, அவளது புனிதத் துக்கு பங்கம் ஏற்படுத்துகிறோம்

சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயிலுக்குச் சமமானவள் கங்கா தேவி. கோயிலுக்குள் செல்லும் நாம் இறை திருவுருவங்கள் மீது குப்பைகளை வீசியெறிவோமா என்ன? அதேபோல்தான், கங்கை யின் புனித நீரிலும் நாம் குப்பைகளையும் அழுக்குகளையும் கலக்காமல் அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை.

வெறும் அறிவுரையுடன் மட்டும் நின்றுவிடாமல், தமது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கங்கையின் புனிதம் காக்க பெரும் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, ஸ்வாமி களின் ‘கங்கா ஆக்ஷன் பரிவார்’ அமைப்பு” என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த நந்தினி திரிபாதி.

இன்று கங்கை நதி எதிர்கொண்டுள்ள பிரச்னைகள்,  அவற்றுக் கான தீர்வுகள், கங்கா ஆக்ஷன் பரிவாரின் செயல்பாடுகள் குறித்து அவர் தந்த தகவல்கள் நம்மை மலைக்கவைக்கின்றன.

பிரச்னைகள்: ஒவ்வொரு நாளும் வீடுகள் மற்றும் தொழிற்சாலை களிலிருந்து கங்கையில் கலக்கும் கழிவு நீரால், அதன் தூய்மை கெடுகிறது; புனிதத் தன்மை மாசுபடுகிறது. சில நகரங்களில், கழிவு நீரை சுத்திகரித்துவிட்டுப் பின்னரே கங்கையில் கலக்கிறார்கள்.ஆனாலும், கழிவு நீரின் அளவு மிக அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கும் இயந்திரங்களின் திறன் போதுமானதாக இல்லை.

‘நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது, பிராண வாயுவை அதிகம் தக்க வைத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது’

என்றெல்லாம் விஞ்ஞானம் வியந்த கங்கை நதி நீரின் தூய்மை இன்று கேள்விக்குறியாகிவிட்டது.

வாரணாசியில் மட்டும் கங்கை நீரைப் பயன்படுத்துபவர்களில் 66 சதவிகிதம் பேர் டைஃபாய்டு, காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீர் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவலத்துக்கு மக்களின் பொறுப்பின்மையும் அலட்சியப் போக்குமே காரணம்.

தீர்வுகள்: தொழிற்சாலைக் கழிவுகள் நதியில் கலக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீராகவே இருந்தாலும், அதை நதியில் கலக்காமல், பாசனத்துக்கும், டாய்லெட்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

கங்கா ஆக்ஷன் பரிவார் நடவடிக்கைகள்: கங்கையின் படுகையிலுள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், வீட்டிலும் முறையான கழிப்பிடம் உருவாக்கி, கங்கை நதியை பாத்ரூமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.

* ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்வது. இதனால் சமைக்கவும், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மாசுபட்ட நீரை இவர்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம். சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் கழிவு நீர் எத்தனை ஆபத்தானது என்பது குறித்தும், வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கங்கையிலோ வேறு நதிகளிலோ கலந்துவிடாமல் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் கல்வி மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது.

பிரச்னைகள்: மக்களின் அசிரத்தையாலும், சில தருணங்களில் பலத்த மழை போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் கங்கை மற்றும் அதன் கிளைநதிகளின் கரையோரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கங்கை வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

தீர்வுகள்:  சேருமிடத்திலேயே குப்பைகளை அள்ளி, அப்புறப்படுத்த வேண்டும்.

* குப்பைகளை ரீ-சைக்கிள் செய்து பயன்படுத்தும் முறையைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.

‘க.ஆ.ப.’ நடவடிக்கைகள்:

நீரில் உள்ள அசுத்தங்களை அகற்றுவதோடு, எதிர்காலத்தில் தொடர்ந்து அசுத்தமாகாதவாறும் தடுத்து, கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் தூய்மையைக் காப்பாற்றுவது. இது திடக் கழிவு மேலாண்மையில் (Solid waste management) அடங்கும்.

* சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்து, பாலிதீன், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கச் செய்வது. பதிலாக துணி மற்றும் சணல் பைகளைப் பயன்படுத்தத் தூண்டுவது.

– இப்படி விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, கங்கா ஆக்ஷன் பரிவார்.

இதுபோன்ற அமைப்புகள் மட்டுமின்றி, குடிமக்கள் ஒவ்வொருவருமே நதிநீர் தூய்மையைப் பாதுகாப்பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். கங்கை மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டின் புண்ணிய நதிகள் யாவற்றையும் மிகத் தூய்மையுடன் பாதுகாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.

இயற்கையைப் போற்றுவோம்; பாதுகாப்போம்! அப்போதுதான் அது நம் வாழ்வையும் வளத்தையும் மேம்படுத்தும்.


புண்ணிய கங்கையின் புனிதப் பயணம்!

கங்கை நதியின் நீளம் சுமார் 2,510 கி.மீ.

இமயத்தில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தி ஆகிறது கங்கை.

உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் ஒரு கோயில் அமைந்துள்ளது. இதற்கு கங்கோத்ரி என்று பெயர்.

இங்கிருந்து 250 கி.மீ தூரம் பாய்ந்து, ஹரித்து வாரை அடைகிறது கங்கை. அங்கிருந்து சுமார் 785 கி.மீ தூரம் பாய்ந்து, அலகாபாத் நகரை அடையும் கங்கை, அங்கே யமுனையுடன் கலக்கிறது.

சுமார் 10,300 அடி உயரத்தில் பாகீரதியாக வெளிப்படுகிறது.

தேவப்பிரயாகை எனும் இடத்தில் பாகீரதி நதி அலகநந்தா என்ற நதியுடன் இணைந்த பிறகு, கங்கையாகப் பாயத் தொடங்குகிறது.

சுமார் 2,500 கி.மீ தூரம் பயணித்து, வங்காளத்தில் நுழைந்ததும், பத்மா நதி என்ற பெயருடன் ஷிவாலயா என்ற நகரம் வரையில் பாய்கிறது கங்கை. அதன் பிறகு, மீண்டும் பாகீரதியாக வங்கக் கடலில் கலக்கிறது.

சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகள்

கடவுளுக்கும் மனிதகுலத்துக்கும் சேவை செய்வதையே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பவர் சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகள். எட்டு வயதில் இல்லத்தை விட்டு வெளியேறி, இமாலயம் சென்று, அமைதியான தியான வாழ்க்கையை மேற்கொண்டவர் அவர். பின்னர், தமது 17-வது வயதில் இல்லம் திரும்பினார். படிப்பில் கவனம் செலுத்தினார். சம்ஸ்கிருதம் மற்றும் வேதாந்தத்தில் உயர் கல்வி முடித்தார். மனித குல சேவைக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். ‘கங்கா ஆக்ஷன் பரிவார்’ அவற்றில் பிரதானமான ஒன்று.

புராணச் சிறப்புகள்…

”பெருமாள் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது விண்ணை அளந்தார் அல்லவா, அப்போது பிரம்மதேவன் தமது கமண்டல நீரால் அவரது திருப்பாதத்தைக் கழுவி பூஜிக்க, அந்த நீர் ஆகாய கங்கையாகப் பரிணமித்தது என்கின்றன புராணங்கள்.

பகீரதனின் பெருமுயற்சியாலும் கடும் தவத்தாலும் பூமிக்கு வந்ததால், கங்கா நதிக்கு பாகீரதி என்று திருப்பெயர் வந்தது.

புண்ணிய கங்கை ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து வீழ்ந்தால், பூலோகம் தாங்காது என்று கருதிய சிவபெருமான், அதைத் தன் திருமுடியில் தாங்கிக்கொண்டு, சிறு தாரையை மட்டுமே பூமியில் விழச் செய்தார் எனப் புராணங்கள் கூறும். இதனால் சிவனாரை கங்காதரன் எனச் சிறப்பிப்பார்கள்.

அஷ்ட வசுக்களும் சாபத்தின் காரணமாக மண்ணில் பிறந்தனர். அவர்களில் முதல் ஏழு பேர், பிறந்ததும் பூவுலக வாழ்வில் இருந்து விடுபடவேண்டும் என்பது விதி. எல்லோருக்கும் இளையவர் பூமியில் நெடுநாள் வாழ்ந்து இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது சாபத்தின் சாரம். அதன்படி கங்கையின் புதல்வனாகப் பிறந்தவரே, மகாபாரதம் போற்றும் பீஷ்மர்.

கங்கையில் புண்ணிய நீராடுவது என்பது எல்லோருக்கும் எளிதானது அல்ல. இந்தக் குறை நீங்க… தீபாவளித் திருநாளில் எல்லா நீர் நிலைகளிலும் கங்கா எழுந்தருளி, எல்லோருக்கும் அந்த புண்ணிய வாய்ப்பை அவள் தந்தருள்வது, நாம் பெற்ற வரம்!”

– கங்கையின் புராணச் சிறப்புகளைப் பட்டியலிடுகிறார், சக்தி விகடனின் நீண்டநாள் வாசகியான ஹரிஓம் பாட்டி எனப்படும் லக்ஷ்மி ஸ்வாமிநாதன் கங்கா ஆக்ஷன் பரிவார் செயல்பாடு களை நேரில் சென்று பார்த்தும், சிதானந்த் ஸ்வாமிகளிடம் கேட்டும் வியந்த இவர் உடனடியாக அதை நமது கவனத்துக்குக் கொண்டுவந்தார். கங்கையின் மேன்மையையும், அதன் புனிதம் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வாசகர்கள் எல்லோருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற இவரது ஆர்வமும், முயற்சியும் குறிப்பிடத்தக்கவை.

Leave a Reply