shadow

srilanka 500கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். மஹிந்தா ராஜபக்சேவை அதிர்ச்சி தோல்வியடைய செய்த சிறிசேனா, பதவியேற்று ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவருடைய அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மைத்ரிபாலா சிறிசெனாவின் அமைச்சரவையில் உள்ள நான்கு முக்கிய அமைச்சர்களான  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வீட்டு வசதி வாரிய அமைச்சர் டிலான் பெரேரா, பொதுநிர்வாகத் துறை அமைச்சர் ரத்நாயக்க, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த இவர்கள், ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளினால் அதிபர் மைத்திரிபால சிறிசேன விரக்தி அடைந்துள்ளார். அதன்காரணமாக பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.

தற்போது பதவி விலகிய நான்கு அமைச்சர்களும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பி பெரைரா கூறியபோது, அமைச்சர்கள் யார் விலகிச் சென்றாலும் அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply