முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மரணம். சோனியா, ராகுல் இரங்கல்
Balram-Jakhar-Dead
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93.

மத்தியப் பிரதேசம் மாநில கவர்னராகவும் பதவி வகித்த பல்ராம் ஜாக்கருக்கு மூளைக்கு செல்லும் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தர். கடந்த மாதம் சுவாசப் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலை சுமார் 7 மணியளவில் மரணம் அடைந்தார்.

பஞ்சாப் மாநிலம், ஃபசிஹா மாவட்டம், அபோஹர் அருகே உள்ள அவரது பிறந்த கிராமமான பன்ச்கோசியில் நாளை காலை பல்ராம் ஜாக்கரின் உடல் தகனம் செய்யப்படுகிறது. டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பல்ராம் ஜாக்கரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டசபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும், மாநில கவர்னராகவும் அவர் பதவிவகித்த காலத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து பொதுவாழ்வில் பணியாற்றிய பல்ராம் ஜாக்கரின் அர்ப்பணிப்பை இந்த நாடும், நாட்டு மக்களும் என்றென்றும் மறக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல்காந்தி தனது இரங்கல் அறிக்கையில், ‘தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் பாராளுமன்ற செயலகத்தை நவீனப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *