shadow

பஞ்சாப் வங்கியில் முன்னாள் பிரதமர் வாங்கிய கடனை அவரது மனைவி செலுத்திய கதை தெரியுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உத்தரவாத கடிதம் பெற்று ரூ.11500 கோடி கடன் வாங்கிவிட்டு வைரவியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்ட நிலையில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கார் வாங்குவதற்காக பஞ்சாப் வங்கியில் கடனாக பெற்ற 5,000 ரூபாயை அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி திரும்ப செலுத்தியிருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அரசு வாகனத்தை தனது சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை என்ற சாஸ்திரியின் கொள்கையால் அவரது குடும்பத்தினர் தனியாக கார் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதிய ஃபியட் கார் ரூ.12,000 என்ற தகவலைக் கேள்விப்பட்ட சாஸ்திரி குடும்பத்தினரிடம் அப்போது 7,000 ரூபாய்தான் இருந்ததாம். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 5,000 கடன் கேட்டிருக்கிறார் சாஸ்திரி . அவர் கேட்ட அன்றே கடன் கொடுக்கப்பட்டது.1964-ல் வாங்கப்பட்ட இந்த கிரீம் நிற ஃபியட் கார் DLE6 என்ற வித்தியாசமான எண் கொண்டது.

கார் வாங்கிய இரண்டே ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தஷ்கென்ட் சென்ற சாஸ்திரி யாரும் எதிர்பாராத வகையில் இறந்தார். இதனால் சாஸ்திரியின் மனைவி லலிதா தனது ஓய்வூதியத் தொகையைக் கொண்டு காருக்கான கடனை கட்டி முடித்திருக்கிறார்.

இந்தக் கார் இப்போது புதுடெல்லி மோதிலால் நேரு மார்கிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முழுக்க முழுக்க இந்தியர்களைக் கொண்டு வங்கியொன்றைத் துவங்க வேண்டும் என்ற கனவில் 1894-ல் தொடங்கப்பட்டது பஞ்சாப் நேஷனல் வங்கி.

Leave a Reply