shadow

டாஸ்மாக்கை மூடுங்கள். இலவச பொருட்களை ஒப்படைக்கின்றோம். 5 கிராம பெண்கள் ஏற்படுத்திய பரபரப்பு

shadow

தமிழக அரசு கொடுத்த விலையில்லா மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி, அரிசி போன்ற பொருட்களை திரும்ப அரசிடமே ஒப்படைத்து விடுகிறோம். அதற்கு பதிலாக டாஸ்மாக் கடையை மூடுங்கள் என ஐந்து கிராமங்களை சேர்ந்த பெண்கள் நெல்லை ஆட்சித்தலைவர் அலுவலகம் இன்று காலை முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மருதடியூர், பாவூர்சத்திரம், அரியப்புரம், வெய்காலிப்பட்டி, வெங்காடம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அப்பகுதியின் சமூக சேவகரும் மதுஒழிப்பு ஆர்வலருமான திருமாறன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.

அப்போது, இலவச அரிசி, டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் தங்களுக்கு தேவையில்லை என்றும், மதுக்கடைகளை உடனடியாக மூடினாலே போதும் என்றும் கூறிய அந்த பெண்கள், இலவசமாக தாங்கள் பெற்ற பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கூறினர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களுடைய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பெண்கள் கூறுகையில், “மதுக்கடைகள் இருப்பதால் சிறுவர்கள் கூட மதுக்குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் வருமானம் அனைத்தும் மதுக்கடைகளுக்கு செல்கிறது. அதனால் மதுக்கடைகளை மூடாமல் இலவசங்கள் கொடுப்பதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவேதான் இலவச பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தோம். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வைத்துவிட்டு செல்வோம்” என்று கூறினர்.
 

Leave a Reply