shadow

800 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இந்து பிரதமரா? பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்
parliament
பரபரப்பான சூழ்நிலையில் இந்திய பாராளுமன்றம் கூடியுள்ள நிலையில் மத சகிப்புத்தன்மையின்மை என்ற விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதால் வழக்கம்போல் பாராளுமன்றம் கூச்சலும் குழப்பமுமாக அமளியில் நேற்று முடிந்தது.

நேற்றைய கூட்டம் இடையிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணிக்கு சகிப்புத்தன்மையின்மை குறித்து விவாதிக்க, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். முதலில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. முகம்மது சலீம், ”  நாட்டில் சகிப்பின்மை நிலவி வருவது அபாயகரமானது. இந்தியா ஜனநாயக நாடு, பாசிச நாடு அல்ல, இவை நிறுத்தப்பட வேண்டும். மோடி பிரதமராக பதவியேற்றபோது, ” 800 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் இந்து பிரதமரின் ஆட்சி ஏற்பட்டுள்ளது’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இதுதான் ஜனநாயகமா… இதுதான் மதச்சார்பின்மையா…? இதுதான் அரசியல் சாசனத்தின் ஓர் அங்கமா…? என உள்துறை அமைச்சரை நோக்கி கேட்க விரும்புகிறேன்” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்

முகம்மது சலீமுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தாம் அவ்வாறு ஒருபோதும் பேசவில்லை என்று கூறினார். அவருடைய பதிலுக்கு பின்னரும் இது தொடர்பான காரசார விவாதங்களால் மோதல் ஏற்பட்டு அவையில் கடும் அமளி நிலவியது. இதனால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் மீண்டும் ஒத்தி வைத்தார்.

Leave a Reply