shadow

போலி செய்தி நிறுவனங்களை இந்த உலகத்தை விட்டே விரட்ட வேண்டும். டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனாட் டிரம்ப் அவ்வப்போது அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய பார்வை ஊடகங்கள் மீது பதிவாகியுள்ளது.

முதல்கட்டமாக வெள்ளை மாளிகையின் உள்ளே செய்தி சேகரிக்க அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், பொலிடிகோ, தி லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் மற்றும் பஸ்பீட் ஆகியவற்றுக்கு தடை விதித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவு ஊடகங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு பதில் அளிக்க வேண்டியது ஒரு அரசின் கடமைதான் என்றாலும் வெள்ளை மாளிகையில் நடப்பதை ஒவ்வொரு நாளும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லை என்பதால் இந்த தடை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறியுள்ளார்.

இந்த தடை குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் டீன் பாக்யுட் கூறியபோது, ‘வெளிப்படையாக ஆட்சி நடத்தும் ஒரு அரசை ஊடகங்கள் தங்கு தடையின்றி அணுகுவது தேச நலனுக்கு முக்கியமானது’ என்று கூறியுள்ளார்

இந்நிலையில் இந்த தடை குறித்து விளக்கம் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப், ‘நான் ஊடகங்களுக்கோ, செய்தி நிறுவனங்களுக்கோ எதிரானவன் அல்ல. மோசமான கட்டுரைகள் குறித்தும் நான் கவலைப்படுவதில்லை. நல்ல கட்டுரைகளை நான் விரும்பவே செய்கிறேன். போலி செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே நான் எதிரானவன். அவைகள் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியவை’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்/

Leave a Reply