shadow

eye

கண்ணே கவனி!

‘ஆஞ்சியோகிராம்…’ இந்த வார்த்தையைக் கேட்டாலே எல்லாருடைய இதயமும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தித் தொடரும். மாரடைப்புக்கான சோதனைகளில் பிரதானமானது ஆஞ்சியோகிராம். இதயத்தில் கோளாறைக் கண்டறியும் சோதனையாக மட்டுமே நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிற ஆஞ்சியோகிராம், கண்களுக்கும் செய்யப்படுகிற சிகிச்சை என்பது தெரியுமா?

ரெட்டினா எனப்படுகிற விழித்திரையில் உண்டாகிற பாதிப்புகளைக் கண்டறியவும் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறதாம். ஏன், எதற்கு, எப்படி… என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம். ‘‘ரத்த நாளங்கள்லேர்ந்து ரத்தம் கசிஞ்சு வெளிய வரும். இதயத்துக்குப் போற ரத்த நாளமா இருந்தா அதோட விளைவுதான் ஹார்ட் அட்டாக். மூளைக்குப் போற ரத்த நாளமா இருந்தா அதோட விளைவு பக்கவாதம். கண்களுக்குப் போற ரத்த நாளமா இருந்தா பார்வை இழப்பு!

நம்ம எல்லாருக்கும் இதயத்துக்குப் போற ரத்த நாளம் அடைக்கப் பட்டு, அதன் விளைவா உண்டாகிற மாரடைப்பு பத்தி தெரிஞ்ச அளவுக்கு, விழித்திரைல உண்டாகக் கூடிய பாதிப்பு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. விழித்திரைக்குள்ளயோ, அதன் அடிப்பாகத்துலயோ அசாதாரணமான ரத்த நாளங்கள் இருக்கிறதைத் தெரிஞ்சுக்கவும் விழித் திரையில் உள்ள ரத்த நாளங்கள்ல கசிவு இருக்கிறதைத் தெரிஞ்சுக்கவும் அந்தப் பகுதியில உள்ள ரத்த நாளங்கள்ல அடைப்பு ஏதாவது இருக்கானு பார்க்கவும் கட்டிகளோ, வீக்கமோ இருக்கிறதைக் கண்டுபிடிக்கவும் இந்தப் பரிசோதனை செய்யப்படுது.

விழித்திரையோட ரத்த நாளங்களுக்குச் செய்யப் படற ஆஞ்சியோவுக்கு திதிகி (‘Fundas Fluorescein Angiography )’னு பேர். ஃப்ளோரோசின் என்ற ஒருவித டையை, கை நரம்பு வழியே ஊசி மூலமா ஏத்துவோம். அது விழித்திரை ஏரியாவுக்குள்ள போய், எந்த இடத்துல கசிவும், எந்த இடத்துல அடைப்பும் இருக்குங்கிறதைத் துல்லியமா காட்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவங்களுக்கு விழித்திரைல பாதிப்பு வரலாம். குறிப்பா நீரிழிவுக்காரங்களுக்கு கட்டுப்பாடில்லாத சர்க்கரையினால தலை முதல் கால் வரை சகல உறுப்புகளிலும் பாதிப்பு வர்ற மாதிரி கண்கள்லயும் வரும். திடீர்னு பார்வை மங்கின மாதிரி உணர்வு, பார்வை முழுக்கவே பறிபோன மாதிரி உணர்வெல்லாம் இதோட அறிகுறிகளா இருக்கலாம்.

பொதுவா விழித்திரைப் பகுதில ரத்த நாளங்கள்ல கசிவு ஏற்பட்டா, அதை அவசர சிகிச்சையா கருதி மருத்துவம் பார்க்கணும். அதாவது, கசிவு ஏற்பட்ட 90 நிமிடங்களுக்குள்ள விழித்திரை நிபுணரை அணுகினா, பார்வையைக் காப்பாத்திடலாம். லேசர், கண்களுக்குள்ள போடற ஊசி, அறுவை சிகிச்சைனு இதுக்கான தீர்வுகள் நிறைய இருக்கு. நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை இருக்கிறவங்க, வருடம் ஒரு முறையாவது விழித்திரை சோதனையை செய்து பார்க்க வேண்டியது அவசியம்…’’

Leave a Reply