முதல்வரின் செயல்பாடுகள் எருமை மாட்டு மேல மழை பெய்தது போல உள்ளது. இளங்கோவன்

evks

சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தும்படி பேசி அதிமுக தொண்டர்களிடம் வசமாக வாங்கிக்கட்டி கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் திருந்தியபாடாக தெரியவில்லை. நேற்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, ‘எருமை மாடு மீது மழை பெய்த மாதிரி ஜெயலலிதா செயல்படுகிறார் என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை வாரிய குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக அறிவிக்கிறார். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட காலத்தில் நின்று கொண்டு இன்னமும் கடிதம் எழுதினோம் என்பது எந்தளவுக்கு சாத்தியம்? தமிழக அரசு இந்த விஷயத்தில் கடிதம் எழுதி கொண்டிருந்தால் மட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. கர்நாடக முதல்வர் காவிரி பிரச்னை ஆரம்பிக்கும் போதெல்லாம்,  அம்மாநில அனைத்துக்கட்சியினரையும் ஒருங்கிணைத்து டெல்லிக்கு சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்திக்கிறார். ஆனால், ஜெயலலிதா அப்படி செய்வதில்லை. கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்துக் கட்சி பிரநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முயற்சி செய்ய  வேண்டும்.

தமிழக அரசு இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொது விசாரணை கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். இலங்கை தமிழர் பிரச்னையில் இலங்கை அரசு மீதும், விடுதலைப்புலிகள் பிரபாகரன் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை முறையாக விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும் என்பதில் காங்கிரஸ் எப்போதும் உறுதியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மோடி-இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சந்திப்பின்போது, மீனவர்கள் பிரச்னையை தீர்க்க இருநாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, செய்யாமல், மீனவர்கள் மட்டும் முடிவு செய்யட்டும் என சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

தமிழக அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் 2 லட்சம் கோடி முதலீடு வந்ததாக தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தை விட சிறிய மாநிலமான ஜார்க்கண்டில் நடந்த மாநாட்டில் 1.50 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது. அதேபோல் குஜராத்தில் 7 லட்சம் கோடி, ராஜஸ்தானில் 9 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை ஒப்பிட்டால் தமிழகத்தில் முதலீடு குறைவு என்பது தெரியும். அதிலும் அந்த மாநாட்டில் வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்ட முதலீட்டாளர் மூன்று பேர் மட்டுமே. மற்றவர்கள் இந்திய நிறுவனங்கள். அதிலும் டாடா, அதானி உள்ளிட்ட உள்நாட்டு பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை.

அமைச்சர்கள், முதலீடு செய்ய வருபவர்களிடம் முதலீட்டில் கால்வாசியை முதலிலேயே கமிஷனாக கேட்பதால் தொழிலதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யப் பயப்படுகிறார்கள். மின் தட்டுப்பாட்டு, மின் வெட்டு இல்லை என வாய்ப்பேச்சில் சொல்லாமல்  சரிசெய்தால் தமிழகத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அரசு பேருந்தில் இருந்த ஓட்டையில் பெண் விழுந்து விட்டதாக செய்தி வந்திருக்கிறது. முன்பெல்லாம் குழந்தைகள் விழுந்தார்கள் என சொன்னார்கள். ஆனால், இப்போது பெரியவர்கள், பெண்கள் விழும் அளவுக்கு அரசு பேருந்துகள் ஓட்டையாகிவிட்டது. அந்தளவுக்கு போக்குவரத்துதுறை இருக்கிறது. இன்னும் நடக்கும், இதுவும் நடக்கும். தொடர்ந்து முதல்வரின் செயல்பாடுகள் எருமை மாட்டு மேல மழை பெய்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *