shadow

உலகையே மாற்றிய ஒரே ஒரு புகைப்படம். ஆதரவற்ற அகதிகளுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய நாடுகள் சம்மதம்.
 refuge
சிரியா நாட்டில் இருந்து வெளியேறு அகதிகளை ஏற்றுக்கொள்ள தயங்கிய பல நாடுகள் மூன்று வயது சிறுவனின் உடல் கரையொதுங்கிய புகைப்படத்தால் மனமாற்றம் ஆகி, அகதிகளை ஏற்றுக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பின்லாந்து மற்றும் அர்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகள் எந்த நாடும் இல்லாமல் அகதிகளாக வருபவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

சமீபத்தில் சிரியாவில் இருந்து குடும்பத்துடன் கடல் மார்க்கமாக தப்பி வந்த அப்துல்லா குர்து என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் படகு விபத்தில் உயிரிழந்தனர். இதில் அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கியது. பல தலைவர்கள் அகதிகளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தும் ஏற்றுக்கொள்ளாத நாடுகள் கூட அந்த ஒரு புகைப்படத்தால் மனம் திருந்தி தற்போது அகதிகளை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆரம்பம் முதலே அகதிகள் விவகாரத்தில் பரிவுடன் நடந்து வருகிறார். மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு அந்த நாட்டு அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இதனால் பெரும்பாலான அகதிகள் ஏஞ்சலா மெர்கலின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பயணம் மேற்கொள்கின்றனர். இப்போதும் அகதிகளை மனிதநேயத்துடன் வரவேற்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான அகதிகள் ஜெர்மனி நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.

பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலா நேற்று நிருபர்களிடம் கூறியபோது, அகதிகளுக்கு பின்லாந்து மக்கள் அடைக்கலம் அளிக்க வேண்டும், தலைநகர் ஹெல்சின்கியில் உள்ள எனது வீட்டை அகதிகள் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தென்அமெரிக்க நாடான அர்ஜென்டீனா அரசு, அகதிகள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அமைச்சரவை தலைவர் அனிபல் பெர்னாண்டஸ் கூறியபோது, ஆபத்தில் உதவுவது அர்ஜென்டீனாவின் இயல்பு, சிரியா அகதிகளுக்காக எங்கள் நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே லக்சம்பர்க் நாட்டில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அதிக அகதிகளை ஐரோப்பிய நாடுகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஹங்கேரி எல்லையோர கிராமத்தில் தவித்த அகதிகள் நேற்று பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் அடைக்கலம் தர முன்வந்துள்ளன.

Leave a Reply