வெப்பமயமாதல் பற்றி உலகம் முழுவதுமே மிகுந்த அக்கறையுடன் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லாபம் மட்டுமே குறி என்ற நிலையில் இருக்கும் வளர்ந்த நாடுகளின் அரசுகள் மற்றும் அந்நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே இந்தப் பிரச்சனையில் வில்லன்களாகச் செயல்படுகின்றன. அண்மையில் நடந்த கோபன்ஹேகன் உச்சிமாநாடு தோல்வியடைந்ததற்கு அமெரிக்கா மற்றும் அதன் கோஷ்டி கானக்குழுவில் இடம் பெற்றிருக்கும் நாடுகளும்தான் காரணமாகும். தற்போது புதிய கோஷ்டி ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. ஐ.நா. சபையின் குழு வெளியிட்ட சில தவறான கணிப்புகளைக் கொண்டு வெப்பமயமாதல் ஒரு பிரச்சனையே இல்லை என்று திரித்துக் கூறும் முயற்சியும் நடக்கிறது. வெப்பமயமாதலால் நதிகள், ஏரிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் ஒருபக்கம். மறுபக்கத்தில் நதிகளைத் திருப்பிவிடுவதால் கடலே காணாமல் போகப்போகிறது என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரல் கடல் என்று அழைக்கப்பட்டாலும் உலகத்திலேயே நான்காவது பெரிய ஏரி என்றுதான் அதை புவியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மத்திய ஆசியப் பகுதியில் உள்ள இந்த ஆரல் கடலுக்கு ஏற்பட்டுள்ள கதி அதிர்ச்சியான தகவல்களை அளித்துள்ளது. அமுதர்யா மற்றும் சிர்தர்யா என்ற இரு ஆறுகளின் இயற்கையான போக்கை மாற்றும் வகையில் திருப்பி விடப்பட்டதால்தான் இந்த ஆரல் கடல் சுருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் 90 விழுக்காடு ஆரல் கடல் பகுதி சுருங்கிவிட்டது. இன்னும் சில பத்தாண்டுகளில் ரியல் எஸ்டேட்காரர்களின் கைகளில் அந்தப்பகுதி போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் தற்போதைய நிலைமை. முன்னாள் சோவியத் நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகிஸ்தான் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள இந்த ஆரல் கடல், ஒரு காலத்தில் 67 ஆயிரத்து 339 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. நீர் மேலாண்மை பற்றி ஆய்வு செய்பவர்களும், பேசுபவர்களும் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, அவர்களின் கருத்தை முழுமை பெறச் செய்யாது என்ற அளவுக்கு இந்தப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 31 முதல் 35 அங்குலங்கள் வரை ஆரல் கடல் மட்டம் குறைந்துகொண்டே போயுள்ளது. இதன் தாக்கத்தை ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. இதன் பாதிப்பு பற்றி ஆராய ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிட்ட ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், இந்த கடல் வற்றிப் போகும் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆரல் கடலுக்கு ஏற்பட்டுள்ள கதிதான் உலகிலேயே பெரிய அளவில் நிகழ்ந்துள்ள சுற்றுச்சூழல் பேரழிவாகும். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்துவிட்டு, இந்த சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்தார். உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமல்லாமல், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளும் தண்ணீர்ப் பிரச்சனையை எழுப்பி வருகின்றன. நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது என்பதைத் தீர்வு காணுவதிலேயே இந்த நாடுகள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இருப்பதும் போகப்போகிறது என்பதைத்தான் பான் கி மூன் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாமல் வெறும் மணற் பகுதியாக கணிசமான ஆரல் கடற்பரப்பு மாறியுள்ளது. அந்தப் பகுதியில் உருவாகும் மணற்காற்று வடக்கில் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் வரையிலும், கிழக்கில் ஜப்பான் வரையிலும் மணலை அள்ளிக் கொண்டு செல்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். புதிது, புதிதாக ஏற்கெனவே பல்வேறு நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த மணற் காற்றும் மக்களை பாதிக்கிறது. வெப்பமயமாதல் பற்றிப் பரந்த மேடையில் விவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், இப்போதைக்கு, இருக்கும் நீரை எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விவாதமும் அவசியம் என்று நீர் மேலாண்மை வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இருக்கும் நதிகளை இணைப்பது, திருப்பி விடுவது ஆகியவை தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றன. குறுகிய காலத்திட்டமாக இத்தகைய ஆலோசனை நடத்தாமல், ஆரல் கடலுக்கு ஏற்பட்ட கதியை கருத்தில் கொண்டு நீண்டகாலத் திட்டத்திற்கு விவாதங்களை நடத்துவதே பூமிப்பந்தைக் காப்பாற்ற உதவும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *