மார்ட்டின் லாட்டரி நிறுவனத்தின் ரூ.122 கோடி சொத்துக்கள் முடக்கம்
Lottery Scam
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் கடந்த 2007ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டது. இருப்பினும் மாநில அரசின் முத்த அதிகாரிகள் சிலர் உதவியுடன் முறைகேடான முறையில் லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகி வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்ததை அடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த விசாரணையில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் பெரும்புகழ் பெற்று விளங்கிய மார்ட்டின் நிறுவனம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  மத்திய அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ”எஸ்.மார்ட்டின் மற்றும் என்.ஜெயமுருகன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள டாய்சன் லேண்ட் அண்ட் டெவலப்மெண்ட், சார்லஸ் ரியால்டர்ஸ், மார்ட்டின் மல்டி புரொஜெக்ட்ஸ், டாய்சன் லக்சுரி வில்லாஸ் ஆகிய 4 நிறுவனங்களும் லாட்டரி ஊழலில் தொடர்புடைய மார்ட்டினுக்கு சொந்தமானவை என்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

மேலும், அமலாக்கத் துறையின் விசாரணையில் இவை அனைத்துமே லாட்டரி ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால், இந்த 4 நிறுவனங்களின் ரூ.122 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கி வைக்கப்படுகிறது” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *