shadow

trainசென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டி ஒன்று திடீரென கழன்று பிளாட்பாரம் மீது ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரயில் ஒன்று நேற்று காலை 10.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரயிலின் 4-வது பெட்டி மட்டும் திடீரன மற்ற பெட்டிகளின் இணைப்பில் இருந்து விலகி, பிளாட்பாரத்தில் பயங்கரமாக மோதியது.

இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிளாட்பாரத்தில் ரயிலில் ஏறுவதற்காக நின்றிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு அங்குமிங்கும் ஓடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே பணியாளரிடம் கேட்டபோது, “ரயிலின் சக்கரங்கள் தடம் புரளவில்லை. தண்டவாளத்திலோ, சக்கரத்திலோ பாதிப்பு இல்லை. ரயில் பெட்டிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இரும்பு கம்பி மற்றும் போல்ட்டுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். விபத்துக்குள்ளான ரயிலின் 4-வது பெட்டியில் இந்த இணைப்பு உடைந்து பெட்டி அதன் அச்சை விட்டு விலகி நடைமேடையில் ஏறிவிட்டது. ரயில் வேகமாக சென்றிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்” என்றார்.

இந்த விபத்தால் அந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மயிலாப்பூர்-வேளச்சேரி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *