shadow

natham-r-viswanathanஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் குழுவில், விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ‘அவலை நினைத்து உரலை இடிப்பதாக’ உள்ளது.

புரட்சித் தலைவி அம்மாவின் அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றபோது மின்சார வாரியத்தின் கடன் சுமை 45,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியிருந்தது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் 2010-11 ஆம் ஆண்டில் 21,892 கோடி ரூபாய் கடன் பெற்று அதில் தவணைத் தொகை மற்றும் வட்டிக்கு மட்டும் 12,667 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார வாரியம் செலுத்தியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது எனக் கூறும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு மின் உற்பத்திக்கான இடுபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவது தெரியுமா? தெரியாதா? மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கானத் தீர்வையை டன் ஒன்றுக்கு ரூ.51.50லிருந்து ரூ.103ஆக 11.07.2014 முதல் உயர்த்தியுள்ளது. மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ளபடி 2.5 சதவீதம் சுங்கவரியும், 2 சதவீதம் counter vailing duty-ம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். மேலும், தமிழகத்திலுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணத்தையும் 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 6.5 சதவீதம் உயர்த்தியுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான, இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் ((GAIL) நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலையை 1.11.2014 முதல் மத்திய அரசு 1 MMBTU எரிவாயுவின் விலையை 4.2 U.S. Dollar என்ற விலையிலிருந்து 5.05 US Dollar ஆக உயர்த்தியுள்ளது. இதனால், இயற்கை எரிவாயுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவு யூனிட் ஒன்றுக்கு இருபது சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வெளி மாநிலங்களிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட வேண்டும். இதனால் நிலக்கரி விலையுடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்து மின் தயாரிப்புச் செலவை அதிகரிக்கும். நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகிலேயே அனல் மின்நிலையங்கள் அமையப் பெற்றால் குறைவான போக்குவரத்துச் செலவின் காரணமாக மின் உற்பத்தி செலவு குறைவாகவே இருக்கும். அதிகப் போக்குவரத்துச் செலவு இருந்தாலும், நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பிலுள்ள சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நிலக்கரி வளம் அபரிமிதமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள நிலக்கரி வளத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்திலுள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 76 சதவீதமாகும். இதனால், அங்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.19 என்ற வீதத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. இருப்பினும், வீட்டு மின் இணைப்புகளுக்கு 200 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.620ம், 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.1,650ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதைப்போன்றே, பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.66 என்ற அளவிலேயே உள்ளது. இருப்பினும், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நகர்ப்புறக் குடியிருப்பு வீட்டு மின் உபயோகிப்போர் ரூ.855ம் 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.3365ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் தான் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.320ம், 500 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.1,330 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வீட்டு மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு, மின் கட்டணங்களில் மிக அதிக அளவு மானியமாக வழங்குவது அதிமுக அரசு தான். புரட்சித் தலைவி அம்மா தலைமையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மேலும், 2014-15 ஆம் ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய் மின் மானியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும். அவ்வாறு வெளியிடப்படும் கட்டணம் காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதை புரட்சித் தலைவி அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply