‘ஈட்டி’ திரைவிமர்சனம்

eettiஒரு ஸ்போர்ட்ஸ் கதையையும் க்ரைம் கதையையும் சரியான அளவில் கலந்து கமர்ஷியல் அம்சங்களுடன் வெளிவந்துள்ள படம்தான் ‘ஈட்டி’. பெரிய நடிகர்கள், வெளிநாட்டு பாடல்கள், பிரமாண்டம் எதுவுமின்றி விறுவிறுப்பான திரைக்கதையை மட்டும் நம்பி வெளிவந்துள்ள ‘ஈட்டி’யை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

சிறு அடிபட்டால் கூட ரத்தம் உறையாது என்ற அதிபயங்கர நோயை உடைய அதர்வா, இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆடுகளம் நரேனிடம் ஓட்டயப்பந்தய பயிற்சி பெறுகிறார். இந்நிலையில் தஞ்சையில் இருக்கும் அதர்வாவுக்கும் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும் ராங் கால் மூலம் காதல் ஆரம்பிக்கின்றது.

தஞ்சையில் இருந்து போட்டி ஒன்றில் கலந்து கொள்ள பயிற்சியாளர் ஆடுகளம் நரேனுடன் சென்னைக்கு வரும் அதர்வா, ஸ்ரீதிவ்யாவை பார்க்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக கள்ள நோட்டு அடிக்கும் சமூக விரோத கும்பலை பகைத்து கொள்கிறார். இதனால் அவர் சந்திக்கும் விளைவுகள், இடையிடையே ஸ்ரீதிவ்யாவுடன் காதல், போட்டிக்காக செய்யும் பயிற்சி என மாறி மாறி வந்து மூன்றிலும் எப்படி பெறுகிறார் என்பதை விளக்குவதே படத்தின் மீதிக்கதை.

ஸ்போர்ட்ஸ்மேனுக்கேற்ற உடம்பு, ஹைட் வெயிட் என கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் அதர்வா. ஸ்ரீதிவ்யாவுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளிலும் ஆக்சன் காட்சிகளிலும், ஸ்போர்ட்ஸ்மேனாகவும் சரியான அளவில் மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற அழுத்தமான கதையை தேர்வு செய்தால் நிச்சயம் முன்னணி ஹீரோ வரிசையில் இடம்பெற வாய்ப்பு உண்டு.

ஜீவா படத்திற்கு பின்னர் ஸ்ரீதிவ்யாவுக்கு கதையுடன் டிராவல் செய்யும் கேரக்டர். சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், அழகம்பெருமாள், பாலா ஆறுமுகம், வில்லன் ஆர்.என்.ஆர் மனோகர் உள்பட அனைவரின் நடிப்பும் ஓகே.

பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசையை குறிப்பாக இரண்டாம் பாதியில் மிக அருமையாக பதிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை கச்சிதம்

ஒரு ஆக்சன் கதையை விறுவிறுப்பான திரைக்கதையின் உதவியோடு சரியான அளவில் நகர்த்தி செல்லும் இயக்குனர் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். கடி காமெடி காட்சிகள் எரிச்சலை மூட்டுகின்றன. இருப்பினும் கதையை சொன்ன விதம், ஒவ்வொரு காட்சியிலும் அதர்வாவின் நோயால் விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என்று ஆடியன்ஸ்களை அலற வைத்துள்ளார். சண்டைக்காட்சியில் அதிரடி தெரிகிறது.

மொத்ததத்தில் ‘ஈட்டி’யில் வேகமான பாய்ச்சல் தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *