shadow

saraswathiசெல்வங்களில் நிலையானது கல்விச்செல்வம். அது இருக்கும் இடத்துக்கு மற்ற செல்வங்கள் யாவும் தாமே தேடிவரும். ஆனால், இப்படியான உயர்ந்த செல்வம் எல்லோருக்கும் பூரணமாக வாய்க்குமா? கல்விச் செல்வத்தால் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்கும் பாக்கியம் யார் யாருக்கெல்லாம் அமையும்?

இதுகுறித்து, கிரக நிலைகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஜாதகத்தில் மகரத்தில் குரு பலவீனம் அடைந்தால் மட்டுமே கல்வியில் ஆர்வமின்மை, ஞானக்குறைவு ஏற்படும். 2-ம் இடத்தில் பாவர்கள் இருந்தாலும், சுபரும் பாபரும் சேர்ந்து இருந்தாலும் கல்வி கற்பதில் நாட்டம் குறையும்.

3-ம் பாவத்தில் கேது அமர்ந்து, அதுவே ரிஷபமாகிவிட்டால், புத்தியில் மந்த நிலை உருவாகும்.

10-ம் இடமான ஞான ஸ்தானத்தில், இரண்டு பாவர்களின் சேர்க்கை ஏற்பட்டால், நன்றாக படிக்கும் மாணவர்களும் இடையிலேயே கல்வியை நிறுத்தும் அவயோகம் ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ல் புதனும் சூரியனும் சேரப் பெற்றவர்கள் மிகப்பெரிய கல்விமானாகவும் பேச்சாற்றல் மிகுந்தவர்களாகவும் திகழ்வர். ஆனால் இரண்டு கிரகங்களையும்  ஒரு பாவக் கிரகம் பார்க்கும் எனில், படிப்பு மூலம் அடைய நினைக்கும் குறிக்கோள் மாறக்கூடும்.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் புதன் தசை, குரு தசை, கேது தசை நடக்கும் காலங்களில், அந்த குழந்தை படிப்பில் சுட்டியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

கிரக ஆதிபத்தியங்களும் படிப்பை நிர்ணயிக்கின்றன. 3 மற்றும் 5-ம் வீடுகளில் செவ்வாய் வலிமையாக இருப்பதோடு, பூமி தத்வ ராசிகளாக உள்ள ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் தொடர்பு ஏற்படுவது சிறப்பு என்கிறது ஜோதிடம்.

ஜாதக ரீதியாக கல்வி பெறுவதில் தடைகளும் தோஷங்களும் உள்ள குழந்தைகள், கல்வியில் ஏற்றமும் வாழ்வில் வெற்றியும் பெற்றிட, குரு வழிபாடு துணை செய்யும்.

இந்த புண்ணிய பாரதத்தில் எத்தனையோ குருமார்கள் தோன்றி மெய்ஞானம் ஒளிர பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீயாக்ஞவல்கியர்

கங்கை நதிக்கரையில் வாழ்ந்த பிரம்மாதர்-சுநந்தா தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லை. பின்னர், பிரம்மாதரின் கடும் தவத்தின் பலனாக திருமால் தரிசனமும், அவர் மூலம் குழந்தை வரமும் கிடைத்தது. அப்படி வரப்பயனாக சுநந்தா கருத்தரித்தும், ஐந்து ஆண்டுகள் ஆகியும், வயிற்றிலிருந்த கரு வெளியே வராமல் தங்கிவிட்டது!

உலக மாயை தன்னைப் பற்றிக்கொண்டு விடும் என்ற காரணத்தால் அந்த ஞானக்குழந்தை வெளிவரவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிரம்மாதர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். அதன் பலனாக திருமால் காட்சிக் கொடுத்து, தனது அம்சமாகப் பிறக்கப்போவதால் உலகமாயை பற்றிக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று தந்தைக்கும் குழந்தைக்கும் உணர்த்தினார். தொடர்ந்து, கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி, சதய நட்சத்திரமும், தனுசு லக்னமும் கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று  குழந்தை பிறக்க, அதற்கு திருமாலே ஞான உபதேசம் செய்வித்தார்.

குழந்தையை காண வந்த மகரிஷிகளும் ஞானிகளும், ‘யக்ஞங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வேதங்களை ஓதுபவன்’ எனும் பொருளில் ‘யாக்ஞவல்கியர்’ என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினர். உரிய பருவத்தில் குரு பகவான் உபநயனம் செய்துவைக்க, பல்வேறு சாஸ்திரங்களையும் வைசம்பாயனர் வம்சத்து குருநாதர்களிடம் கசடறக் கற்று, மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார் யாக்ஞவல்கியர்.

இவருடைய மிகப்பெரிய சாதனையாக… சூரிய பகவானுக்கு எதிரில் தேர்த்தட்டில் அமர்ந்து, சுக்ல யஜூர் வேதத்தை அருளிய துடன், சூரியபகவானுடன் விவாதம் செய்ததைச் சொல்வார்கள். மிகச் சிறந்த ஞான குருவான இவரது திருவுருவப் படத்தை தினமும் தரிசித்து வழிபடும் குழந்தைகள் கல்விக்கலையில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

யாக்ஞவல்கிய குரு வழிபாடு

குழந்தைகளை சூரிய உதய காலத்தில் நீராடச் செய்து, அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி (திருநீறு அல்லது திருமண்) இடச் செய்து, மூன்று முறை திரியம்பகம் –  மாம்ருதாத் மந்திரத்தைச்  சொல்லச் சொல்லி, பிறகு துளசி தீர்த்தத்தைப் பருகக் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக… ஸ்ரீஞானசரஸ்வதி மற்றும் ஸ்ரீயாக்ஞவல்கியரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, பூஜையறையில் கிழக்குமுகமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ‘ஸ்ரீவித்யா கணபதயே நம’ என்று மூன்று  முறைச் சொல்லி அருகம்புல் சமர்ப்பித்து பிள்ளையாரை வழிபட வேண்டும். பின்னர் கலைவாணி குறித்த துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதுடன், ‘ஸ்ரீயாக்ஞவல்கியர் வித்யா துதி’யையும், மூன்று  முறைச் சொல்லி வணங்கவேண்டும். பிறகு, தூப-தீப காட்டி, தேங்காய் – பழம் தாம்பூலம் மற்றும் பால் சாதம் சமர்ப்பித்து, மீண்டும் கற்பூர ஆரத்தி காட்டவேன்டும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி

ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.

ஸ்துதி

ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:
விஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:
வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:
க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்
யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே

(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,

கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்.

ராசி…சரஸ்வதி!

அனுதினமும், குழந்தைகளை அதிகாலை எழச்செய்து, சூரிய வணக்கம் செய்து அவருடைய தியான மந்திரம் கூறி வழிபடச் சொல்வது சிறப்பு. அதேபோன்று குழந்தையின் ராசிக்கு உரிய வித்யா சரஸ்வதி தேவியை வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஸ்ரீதத்வ நிதி, காச்யபம், மாசாரம், மானசாரம், நரசிம்ம ப்ரசாரதம், மூர்த்திதியானம் போன்ற ஞானநுல்கள் பன்னிரு ராசிகளுக்கான சரஸ்வதிதேவியர் குறித்து விவரிக்கின்றன.

மேஷம் – பராசம்டிதிதா

ரிஷபம் – சாரதா

மிதுனம் – ருத்ர பைரவி

கடகம் – மகாசரஸ்வதி

சிம்மம் – த்ரைலோக்ய மோகனா

கன்னி – ஸ்ரீவித்யா

துலாம் – நீலா

விருச்சிகம் – பாரதி

தனுசு – வாகீச்வரி

மகரம் – மாத்ரிகா

கும்பம் – தாரோத கலா

மீனம் – பாலா

இதுபோன்றே, 27 நட்சத்திரங்களுக் கும் உரிய ஸ்ரீசரஸ்வதி ரூபங்களும் சில ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

Leave a Reply