20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி இழப்பா? டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவல் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. டெல்லி முதல்வரான ஒருசில நாட்களிலேயே 20 எம்எல்ஏக்களை அமைச்சர்களின் ‘நாடாளுமன்ற செயலாளர்களாக அரவிந்த் கெஜ்ரிவால் நியமனம் செய்தார்

இதன் படி அமைச்சர்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 20 பேருக்கும் எம்எல்ஏ பதவியுடன் இணை அமைச்சருக்கு இணையான பதவியும் அளிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, டெல்லி முதல்வர் அலுவலகத்திற்கு மட்டுமே இதுபோன்ற செயலாளர் ஒருவரை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 20 பேரை செயலாளர்களாக நியமிக்க முன்னதாகவே டெல்லி சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நியமனப் பதவியையும் சேர்ந்து அந்த 20 எம்எல்ஏக்களும் இரட்டை ஆதாயங்கள் பெறும் பதவிகளை வகிக்கின்றனர் என்றும் அவர்களைத் தகுதிநீக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் படேல் என்பவர் தேர்தல் ஆணையத்திக்கு மனு அளித்தார். இதனை எதிர்த்து அந்த எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை தேர்தல் ஆணையம் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், இரட்டை பதவி வகிக்கும் 20 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்க வேண்டும் என்று பரிந்துரைத்து தேர்தல் ஆணையத்திலிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *