shadow

ஆண்களின் விந்தணுவில் 9 மாதங்கள் வாழும் இபோலா வைரஸ். விஞ்ஞானிகள் தகவல்
ebola
சமீபத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்திய நோய் இபோலா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்கி பின்னர் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நோய் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டாலும், இந்த நோய் குறித்த புதிய தகவல் ஒன்றை விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆண்களின் விந்துக்களில் இந்த நோயின் வைரஸ்கள் ஒளிந்திருக்கும் என்றும், இந்த நோய் பாதித்து குணம் அடைந்தவர்கள் குறைந்தது ஒன்பது மாதங்களுக்கு பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இபோலா நோயிலிருந்து குணமடைந்து வந்துள்ள சுமார் 100 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில், அவர்களில் நான்கில் ஒருவரின் விந்துணுவில், அவர்கள் குணமடைந்து 7 முதல் 9 மாதங்களின் பின்னரும் இபோலா வைரஸ் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இபோலா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆண்கள் 3 மாதங்களுக்கு பாலுறவில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் அல்லது ஆணுறையை பயன்படுத்த வேண்டும் என்று முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply