shadow

fake certificatesசென்னையில் போலி கல்விச் சான்றிதழ் தயாரித்து அதனை சுமார் 50 பேர்களிடம் விற்பனை செய்த கும்பல் ஒன்றை நேற்று போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சான்றிதழ்களை பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பல்கலைக்கழகம் உள்பட பல பிரபல கல்லூரிகள் பெயரில் போலி கல்வி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்ததாக வியாசர்பாடியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, கொடுங்கையூரைச் சேர்ந்த ஞானவேல் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி பின்னர் ஒழுங்கீனம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதமன் (57). வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியில் வசிக்கும் அவரது மகன் லோகேஷ் (32) ஆகியோர் கூட்டாக ஒன்றுசேர்ந்து போலி சான்றிதழ் தயாரித்து, அவற்றினை புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் ஆகியோர் மூலம் சுமார் 50 பேர்களிடம் பெருந்தொகைக்கு விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட குற்றவாளிகளின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 7 கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள் முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர ஒரு அட்டை பெட்டி நிறைய போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டது.

ஒரு சான்றிதழ் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த சான்றிதழ்களை பெற்றவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply