shadow

drugs-pic-getty-images-

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் “ஜன ஒளஷதம்’ (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (GENERIC MEDICINE) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது நிலவும் நோய்க்கு மாமருந்தாக இருக்கும்.

இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், வயிறு தொடர்பான நோய்களுக்கான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.

நோயாளிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மாத்திரைகளின் மூலக்கூறு பெயர்களை மட்டுமே எழுத வேண்டும் என்றும், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வணிக முத்திரை மருந்துகளின் (BRANDED MEDICINE) பெயர்களை எழுதக்கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர்.

அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது, தனியார் வணிக முத்திரை மருந்துகளின் பெயர்களையே எழுதும் நிலை உள்ளது. மருத்துவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கினாலும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுமானால், இந்த ஜன ஒளஷதம் மூலம் மக்கள் பெருமளவு பயனடைவார்கள்.

1980-களில் ரூ.1,500 கோடியாக இருந்த இந்திய மருந்து தயாரிப்புத் தொழில், 2012-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1,19,000 கோடி மதிப்புள்ள தொழில்துறையாக வளர்ந்துள்ளது. அந்த அளவுக்கு நோய்களும் பெருகியுள்ளன. விழிப்புணர்வும் பெருகியுள்ளது.

தற்போது நடைமுறையில், சுமார் 300 மருந்துகள் அட்டவணைப் பட்டியலில் உள்ளன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் அவற்றை விற்க வேண்டும். இந்த மருந்துகளை மிகக் குறைந்த அளவிலேயே மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதன்மூலம் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. அட்டவணையில் உள்ள மூலக்கூறு மருந்துகளுடன் சில வைட்டமின்களை சேர்த்து வணிக முத்திரையுடன் சந்தையில் விற்கின்றன. இந்த மாத்திரைகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவேதான் 300 மடங்குவரை கூடுதல் விலை நிர்ணயித்து விற்பதிலும், இவற்றைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால்தான் மூலக்கூறு மருந்துகள் பலவும் சாமானியனின் வாங்கும் சக்தியை மீறியதாக இருக்கின்றன.

சில உயிர்காப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியாதபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடுகிறது. ஆனாலும், காப்புரிமைப் பிரச்னைகளால் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.

ஜன ஒளஷதம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், அரசு மருந்தகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், மாநில அரசுகள் ஈடுபடலாம். இவற்றுக்கு விலைக் கழிவு உண்டு என்று ஜன ஒளஷதம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைச் சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை அம்மா மருந்தகங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்துவது, அல்லது முகவர்களை நியமித்து அம்மா மருந்தகத்தின் கொள்கைப்படி குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மிக எளிது. இருப்பினும், தற்போது அம்மா மருந்தகங்களில் வணிக முத்திரை மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன ஒளஷதம் மருந்து, மாத்திரைகள் மூலக்கூறு அடிப்படையில் கிடைக்கும்போது, அவற்றை அம்மா மருந்தகங்கள் விற்பனை செய்ய முற்பட்டால், மக்களுக்கு உண்மையிலேயே குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மூலக்கூறு மருந்துகள் எழுதித் தரப்படுகின்றன என்ற போதிலும், வெளியிடங்களிலும் பெருநிறுவன மருத்துவக்கூடங்களிலும் அத்தகைய சூழ்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் கிடைக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழும்.

தமிழ்நாட்டில் ஒருசில கூட்டுறவு அங்காடிகளில் மருந்துகள் விலைக் கழிவுடன் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த மருந்தகங்கள் நொடிந்து போனதற்குக் காரணம், அவை விற்கும் வணிக முத்திரை மருந்துகளின் பெயரை மருத்துவர்கள் பரிந்துரைகளில் குறிப்பிடாததுதான். உண்மையில் மருந்து இருக்கும். ஆனால் மருத்துவர் எழுதித் தந்த பெயரிலான மருந்தாக இருக்காது. அதற்கு இணையான மருந்து என்று சொல்லி விற்கவும் மாட்டார்கள். ஆகவேதான், கூட்டுறவு அங்காடிகள் நொடிந்து போயின.

விரைவில் ஜன ஒளஷதம் என்ற வணிக முத்திரையில் மூலக்கூறு மருந்துகள் கிடைக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் மூலக்கூறு மருந்துகளை விற்பனை செய்யவும், அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவுமான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

Leave a Reply