shadow

rajkumar memorialபெங்களூரில் நாளை நடைபெறவுள்ள  கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவிடத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு, கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் ரூ. 7 கோடி செலவில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் 800 பேர் அமரக்கூடிய திறந்தநிலை திரையரங்கம், குளம், அழகிய தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவிடத்தின் முகப்பில் 3 அடி உயரமுள்ள ராஜ்குமாரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. நடிகர் ராஜ்குமாரின் நிரந்தர புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.ராஜ்குமார் புண்ணியபூமி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் சனிக்கிழமை(நவ.29) காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் ராஜ்குமார் நினைவிடத்தை முதல்வர் சித்தராமையா திறந்துவைக்கிறார். இந்தவிழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்புவிடுத்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கர்நாடக அரசுக்கு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மாலை 6 மணிக்கு நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. இந்தவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை அமைச்சர் ரோஷன்பெய்க் செய்து வருகிறார்.

Leave a Reply