shadow

12அண்மையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, வளைகுடா நாடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் இருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சிறையில் இருப்பவர்களை மீட்பது தொடர்பான அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என உறுப்பினர்கள் முன்பே கவலை தெரிவித்திருந்தனர்.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளம், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அரபு நாடுகளில் வேலைக்குச் சென்றால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு பல லட்சங்களை செலவழித்து செல்கின்றனர்.

விசா பெற்று அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின் பாஸ்போர்ட், அவர் அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே, விசா அளித்த நிறுவனத்தால் அல்லது விசா அளித்த நபரால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் அவருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை அங்கு வேலை செய்யும் காலம் வரை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். விசா காலமோ, அல்லது பணிக்காலமோ முடிந்து மீண்டும் சொந்த நாட்டுக்கு அவர் திரும்பும்போதுதான், அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும்.

விசா, மருத்துவப் பரிசோதனை, விமான டிக்கெட் என குறைந்தது ரூ.1.50 லட்சம் செலவு செய்து வேலைக்குச் செல்வோர் அந்நாட்டில் சந்திக்கும் முதல் பிரச்னை மொழிப் பிரச்னைதான். ஹிந்தி, மலையாளம், ஆங்கில போன்ற மொழி அறிவு இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவர் அங்கு பணி செய்வது கடினம்.

மொழி அறிவு, வேலையின் தன்மை போன்றவற்றில் பழக்கம் ஏற்பட்டு தொய்வில்லாமல் வேலையில் ஈடுபட குறைந்தது 6 மாதம் வரை மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டும். பல லட்சங்களை செலவழித்து அந்நிய நாட்டுக்கு சென்றவர் தனது உழைப்பின் மூலம் வீட்டுக்கு பணம் அனுப்ப பல மாதங்களாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சம்பளம் வழங்கியதாக பணியாளர்களிடம் ஒப்புகைக் கடிதம் பெற்றுவிடும் நிறுவனங்கள், முறையாக சம்பளம் வழங்குவதாக அந்நாட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். ஆனால், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்வோருக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.

தொழிற்கல்வி பயின்றவர், பட்டம் பெற்றவர்கள் வளைகுடா நாடுகளில் கௌரவமான வேலையில் அமர்த்தப்படுவர். சாதாரண கடைநிலை ஊழிய வேலைக்குச் செல்வோரின் நிலை பரிதாபத்துக்கு உரியது. அந்நிறுவனம் கொடுக்கும் அனைத்துப் பணிகளையும் அவர் நிறைவேற்ற வேண்டும். அங்கு தனியார் நிறுவனங்களில் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியினை, பணியில் அமர்த்தப்படும் கடைநிலை ஊழியர்கள் குறைந்தது 6 மாதம் செய்ய வேண்டும்.

கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்துகின்றன. அரபு நாடுகளில் சாலைப் பராமரிப்பு போன்ற பணிகளில் அமர்த்தப்படுவோரில் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.

வளைகுடா நாடுகளில் பணியில் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேர் சாதாரண கடைநிலை ஊழியராகவே பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடைநிலை ஊழியருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ரூ.12,500. தங்குமிடம் மட்டும் இலவசம். உணவு போன்ற பிற செலவுகளை சிக்கனமாக கையாண்டால்கூட ரூ.5 ஆயிரம்தான் மீதம் கிடைக்கும். குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்தால்தான் தன்னிறைவு பெற முடியும்.

மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அந்நிய நாட்டுக்கு சென்றுதான் வேலை செய்ய வேண்டுமா? சொந்த நாட்டில் உழைப்பை செலுத்தி உயரும் சிந்தனை நம்மிடம் இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற அவலநிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

Leave a Reply