shadow

ila.ganesanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு தர்மசங்கடம் ஏற்படும் நிலையை ஆக்கவேண்டாம் என்றும், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஜெயிலில் இருக்கும் இந்த நிலைமையில் ரஜினியை கட்சியில் இழுத்தால் மிக எளிதாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என கணக்கு போட்டு ரஜினியை கட்சிக்குள் இழுப்பதற்கு பாரதிய ஜனதாவின் மேலிடத்தலைவர்கள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். பாஜகவின் தேசிய தலைவர் ரஜினியிடம் தொலைபேசியில் பேசுவது, அந்த கட்சியின் தமிழக தலைவர் ரஜினியின் வீட்டுக்கு சென்று லதா ரஜினிகாந்த் அவர்களிடம் பேசுவது போன்ற சம்பவங்கள் இதன் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இதுகுறித்து கூறியதாவது: “நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர். ஆத்மார்த்தமான தேசிய எண்ணம் கொண்டவர். எங்கள் கட்சி தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோருடனும் நல்ல நட்புடன் இருந்தவர். யூகத்தின் பேரில் அவர் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற கேள்விகளால் அவரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இல்லை. அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்து தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனிடையே ரஜினியை அரசியலுக்கு பாரதிய ஜனதா இழுக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானசேகரன், ‘ரஜினியை அரசியலுக்கு இழுப்பதன் மூலம் பின்கதவு வழியாக பாரதீய ஜனதா உள்ளே நுழைய இந்த முயற்சி நடக்கிறது. இதை செய்தியாக தான் பார்க்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் அனைத்து கட்சிகளுக்கும் நண்பர் தான் என கூறியுள்ளார்.

Leave a Reply