தீர்மானங்களின் விவரம் வருமாறு:

1. மறைந்த தென் ஆப்பிரிக்க நாட்டின் கருப்பர் இன தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு இதய அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் இப்பொதுக்குழு தெரிவித்தல்.

2. ஏற்காடு இடைத் தேர்தலில் பலியான மாணவர் அணியின் துணை அமைப்பாளர் ராஜமுருகனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரது கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

3. ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறாம் பாகத்தை எழுதிய கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

4. ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து செயல்வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

5. இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

6. மின் உற்பத்தியிலும், மின் விநியோகத்திலும் அரசாங்கம், உரிய கவனம் எடுத்துக் கொள்ளாதது மட்டும் அல்லாமல், தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை ஜெயலலிதா வேண்டுமென்றே முடக்கிப் போட்டதன் காரணமாகத்தான் இப்பொழுது அதுவும் குளிர் காலத்தில் மின்பற்றாக்குறை தமிழ்நாட்டில் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.

7. தேவையான தொலை நோக்குத் திட்டம் வகுத்திடாத காரணத்தாலும், தமிழ்நாட்டை இருண்ட மாநிலமாக்கி, அனைத்து தொழில்களையும், வாழ்வாதாரங்களையும், முடக்கி குற்றவாளியாகத் தான் மக்கள் அவரை பார்க்கிறார்கள்.

8. பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாகவே வழங்க வேண்டும் என்பது அரசின் கடமையாகும். அதை மாற்றி குடிநீர் வணிகத்தை அறிமுகப்படுத்தி குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத இந்த அரசை கண்டிக்கத்தக்கது.

9. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்தவித முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

10. பயிர் காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிர் இழந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

11. நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலையை இந்த அரசு வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், கரும்புக்கு ரூ.3,500-க்கு வழங்க வேண்டும்.

12. தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய- மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

13. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய- மாநில அரசுகளுக்கு இப் பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

14. தென்மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

15. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கப்பட்டு இருப்பதை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது.

16. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2வது ராக்கெட் தளத்தை அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி இருந்தார். இதன்மூலம் அந்த மண்டலம் வளர்ச்சி பெற்று தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திடும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

17. கேரள அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களை வெளியேற்ற கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சினை குறித்து மத்திய-மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி அட்டப்பாடியில் காலம் காலமாக இருந்து வரும் தமிழர்களை காப்பாற்ற முன்வரவேண்டும்.

18. சிங்கப்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு சிங்கப்பூர் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

19. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு அவர்களை மீண்டும் பணி நியமனம் செய்து அவர்களது குடும்பத்தை காப்பாற்றிட முன்வர வேண்டும்.

20. போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரியம், டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

21. இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது.

22. இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும்; தமிழினப் படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமான துமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஐநா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிடவும் வலியுறுத்துவதோடு, இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது சட்டத் திருத்தம் அமைந்திட இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி முன்வர வேண்டும்

23. கழக அமைப்புக்களின் தேர்தல்கள், டிசம்பர் மாதத்திற்குள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கழகக் கட்டமைப்பு விதிகளில் மாற்றம் செய்ததாலும், தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களாலும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தினர் பணியாற்ற இருப்பதாலும், 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் கழக அமைப்புத் தேர்தலை முழுமையாக நடத்தி முடித்து விடுவதெனவும், அதுவரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்கள் எனவும் இப்பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது.

Leave a Reply