shadow

திமுகவின் திட்டம் எடுபடுமா? 100க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே போட்டியா?

dmk
நேற்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில்  மொத்தமுள்ள 234 இடங்களில், 170 இடங்களில்  திமுக போட்டியிடும் என்றும், பாமக, விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் இடமில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளே அளிக்கப்படும் என்றும்  கூறியிருந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று ஆலோசனை செய்த கட்சிகள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தன. திமுகவின் கூட்டணியே தேவையில்லை என்ற அதிரடி முடிவிற்கும் அந்த கட்சிகள் வந்ததால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதற்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு ஆங்கில நாளேட்டில் கொடுத்துள்ளதாக வந்துள்ள பேட்டியில் இடம் பெற்றுள்ள செய்திகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அவர் பெயரில், அந்தப் பத்திரிகையில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சம்மந்தமே இல்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பேட்டி அளிப்பதும், செய்திகளைக் கொடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. கழகத்தைப் பற்றி அந்த ஏட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதால், கழகத் தோழர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

டி.கே.எஸ் இளங்கோவன் கண்டிப்பாக திமுக தலைமைக்கு தெரியாமல் பேட்டி அளித்திருக்க வாய்ப்பில்லை. தங்களிடம் கூட்டணி சேர நினைக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்க கூடாது என மிரட்டல் விடுப்பதற்காகவே திமுக பரிசோதனை முறையில் இளங்கோவனை பேச வைத்ததாகவும், ,காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு சூசகமாக ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்கான நடவடிக்கையை திமுக திட்டம் போட்டு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இனிமேல் திமுக தலைமையின் இதுபோன்ற சூழ்ச்சி நடவடிக்கைகள் பலிக்காது என்பது உறுதியாகியுள்ளது. இனிமேல் திமுக தலைமையில் ஆட்சி என்றால் அது கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாதே என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவே வரும் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பாலான தொகுதிகளை தாரை வார்த்துவிட்டு 100க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply