shadow

வைகோ, பிரேமலதா முடிவால் தனித்து விடப்பட்டதா திமுக?

dmkதமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் எட்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க இப்போதே தங்கள் முதல்கட்ட பணிகளை தொடங்கிவிட்டது. யாருடன் கூட்டணி வைப்பது, யாருடன் கூட்டணி வைக்கவேண்டாம் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் கூட்டம் ஒன்றில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ” “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். இனி ஒருபோதும் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்” என கூறியுள்ளார். அதேபோல் மதிமுக தலைவர் வைகோ, “”அதிமுக, திமுக அல்லாத மக்கள் கூட்டு இயக்கம் என்ற அணியை அமைக்கவுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார். இதனால் திமுக தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் அதிமுக மீது பெரிய அதிருப்தி இல்லாததால், அதிமுகவை வீழ்த்த பலமான கூட்டணியுடன் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் திமுக உள்ளது. ஆனால் முக்கிய கட்சிகளான தேமுதிக, மதிமுக ஆகிய இரு கட்சிகள் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளது. பாமகவும் திமுக, அதிமுகவுடன் இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது. மீதமிருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை நம்பி தேர்தலில் திமுக களத்தில் இறங்கினால் தோல்வி உறுதி என்று திமுக தலைவர்களுக்கே தெரிய வந்துள்ளது. ஆனாலும் கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திமுக பிரமுகர் ஒருவர் கூறியபோது, “”இப்போது சில கட்சிகள் சேர்ந்து ஒருங்கிணைத்துள்ள மக்கள் கூட்டு இயக்கம் எத்தனை நாட்கள் இதேபோல் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அப்படியே ஒரு கூட்டணி உருவானாலும் அது தேர்தல் வெற்றிக்கு வித்திடும் கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்க வாய்ப்பில்லை. இந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில்தான் அமைய வேண்டும் என்று விஜயகாந்த் ஒருவேளை கோரிக்கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

மக்கள் கூட்டு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தேமுதிக தங்களுடன் இணைவதை வரவேற்றாலும், பாஜகவுடனான நட்பு குறித்த நிலைப்பாட்டை விஜயகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

தமிழக தேர்தல் களம் அரசியல் அதிரடி மாற்றங்களுக்கு பெயர் போனது. எனவே, தேர்தல் நெருங்கும்போது எத்தகைய மாற்றமும் நடைபெறலாம்” என கூறியுள்ளார்.

Leave a Reply