shadow

மாயமான சென்னை விமானம் வனப்பகுதியில் விழுந்துள்ளதா? புதிய தகவல்

AN32கடந்த ஜூலை 22ஆம் தேதி சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் கிளம்பிய ஏ.என்-32 ரக ராணுவ விமானம், திடீரென மாயமாகி 10 நாட்கள் ஆகிவிட்டபோதிலும் விமானத்தை தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேடுதல் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டும் நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை. இவ்வளவுக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவ்வப்போது தேடுதல் பணியை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை வங்கக்கடலில் மட்டுமே விமானத்தை தேடி வந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வனப்பகுதிக்குள் தேட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விமானம் மாயமான தினத்தில் ஒரு பெரிய பொருள் பலத்த சத்தத்துடன் விசாகப்பட்டினம் வனப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்ததை அப்பகுதி யில் வசிக்கும் பழங்குடி மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப் பட்டது. விமானப்படையை சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் சற்று முன்னர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும் மாயமான விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரியான ரகுவீர் வர்மாவின் குடும்பத்தினர், ‘ரகுவீரின் செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, ரிங் டோன் கேட்பதாகவும், மறுமுனையில் யாரும் போனை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய தகவல்கள் படிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மை என்றால் விமானத்தில் சென்றவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தை ஆழ்கடல் பகுதியில் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சொந்தமான ‘சாகர்நதி’ என்ற கப்பலை தேடுதல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ‘சமுத்ரா ரத்னாகர்’ என்ற அதிநவீன கப்பலையும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply