shadow

தீபாவளியும், விநாயகர் சதூர்த்தியும்தான் மிருகவதை. இயக்குனர் வெற்றிமாறன்

ஜல்லிகட்டு என்பது பாரம்பரிய தமிழர்களின் வீரவிளையாட்டு. மிருகவதை என்று தடை செய்வது கொடுமையானது. உண்மையில் தீபாவளியும், விநாயகர் சதூர்த்தியும்தான் மிருக வதையுடன் கூடிய பண்டிகை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஏறுதழுவுதல்’ எனப்படும் ஜல்லிக்கட்டு, தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், மிருகவதை எனக் கூறி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின்போது எண்ணற்ற விலங்குகளும் உயிரினங்களும் பட்டாசு வெடிச் சப்தத்தால் பீதி அடைகின்றன. பல பறவைகள் இறக்க நேரிடுகிறது. மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியது தீபாவளி பண்டிகைதான்.

இதேபோல, விநாயகர் சதுர்த்தியின்போது ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. அவ்வாறு கரைக்கப்படும் சிலைகளில் உள்ள வேதியியல் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் வதைக்கு காரணமான விநாயகர் சதுர்த்திக்கும் தடை விதிக்கப்படுமா? உண்மையான மிருகவதையை விட்டுவிட்டு, ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு தடை கோருவதில் வேறொரு நோக்கம் இருப்பது தெளிவாகிறது. ஒவ்வொரு பூர்வ குடியும் தங்களது அனுபவங்களை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி வருகிறது. இதனுடைய தொடர்ச்சியாகவே “ஜல்லிக்கட்டு’ உள்ளது.

காளை இனத்தை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும்தான் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். நாட்டு மாடுகளின் பாலை குடிக்க மக்கள் மறந்ததுதான் கடந்த 30 ஆண்டுகளில் நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிக்ககாரணம். இதுபோன்ற சூழலில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கான ஒரு அம்சமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. சில விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்னையில் அடிப்படை புரிதல் இல்லாததே இந்த விவகாரம் தீவிரம் அடையக் காரணம்.

வெற்றிமாறனின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply