விசா முறைகேடு தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி நேற்று இரவு 11 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்காக குரல் கொடுத்த மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி’ என கூறினார்.

அமெரிக்க துணைதூதராக இருந்த தேவயானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை தூதரக அதிகாரி பதிவியில் இருந்து நீக்குமாறு நேற்று அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியா அதற்கு மறுத்துவிட்டதால், தேவயானியை உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. எனவே நேற்று நியூயார்க்கில் இருந்து டெல்லி திரும்பினார். அவர் இந்தியா திரும்பினாலும், அவரது குழந்தைகள் மற்றும் கணவர் அமெரிக்காவில்தான் இருக்கின்றனர்.

நேற்று இரவு டெல்லி வந்த தேவயானியை அவரது தந்தை கோபர்கடே வரவேற்றார். அவருடன் வெளியுறைத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து நேராக அவர் மராட்டிய பவன் இல்லத்திற்கு சென்று தங்கினார்.

இந்தியாவுக்கு திரும்பிய தேவயானி இன்று டெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் புதிய பணியை ஏற்க உள்ளார். இதனிடையே தேவயானியை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவரை அடுத்த 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய – அமெரிக்க உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply