நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர், தேவயானி கோப்ரகடே. 39 வயதான இவர் ஒரு பொது இடத்தில் இருந்தபோது, வேலைக்காரப் பெண் விசா பெற்றதில் மோசடி செய்ததாகவும், அவருக்கு சரியான சம்பளம் அளிக்காததற்கும் குற்றம்சாற்றபட்டு கைகளில் விலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.  இதனை அடுத்து அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், இந்த பிரச்சினையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வரும் அமெரிக்க அரசு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில்,வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பெண் தூதர் தேவயானியை மீட்டு, இந்தியாவின் கவுரவத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை பாராளுமன்றத்துக்கு திரும்ப மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் தொலைபேசியில் உரையாடிய ஜான் கெர்ரி, ‘தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரையொத்த வயதுடைய இரு பெண்களுக்கு தந்தை என்ற முறையில் நான் மிகவும் வருந்துகிறேன்.

.இந்த கைது விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையிலான நெருங்கிய நட்பு பாதிக்கப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது’ என்று உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply