shadow

dayanidhiகலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை நேற்று முடக்கி வைக்க உத்தரவிட்டது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மத்திய அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துகள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசர அவசரமாக செயல்பட்டுள்ளது என்பதே யாரோ பின்னணியில் இருப்பதை தெளிவாக்குகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் எதிலும் எனக்கு பங்கோ, பாத்தையோ இல்லாதது மட்டுமல்ல, அவைகளிடமிருந்து எனக்கு எந்தவித பணப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும், சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் கம்பெனிகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினை தெளிவாக்கும்.

இரு கம்பெனிகளுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பணம் முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் செய்ய முடியாது என்பது சாதரண அறிவு படைத்தவர்களுக்கு தெரிந்த விவகாரம். அப்படி வியாபார ரீதியாக மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பண முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும். அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது? ஒரு சொத்தை முடக்க வேண்டுமென்றால் அந்த சொத்து குறிப்பிட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்ததால்தான், அதனை முடக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டவில்லையா?

முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்துகளை எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்தும், முடக்கும் இந்த முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தைத்தான் தருகிறது. அமலாக்கத்துறை ஏடுகளுக்குத் தந்த செய்திக்குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்ட்ரோ கம்பெனி, சன் டைரக்ட் டி.வி.யிலும், சவுத் ஏசியா எப்.எம்.மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007 ஆம் ஆண்டு இறுதியில் இருந்துதான் என்பதை அந்த நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. உண்மை அப்படியிருக்க அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன்வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது அல்லவா. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது.

2007 ஆம் ஆண்டு மார்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்த கால கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. 2007 ஆம் ஆண்டுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப்பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா?

மேலும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இதன் தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சட்டபடி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவசங்கரனும், அதனை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் அமலாக்கத்துறையில் சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை தெளிவாக்குகிறது. இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அதிலே வெற்றி பெறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

Leave a Reply