வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று சென்னைக்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி 530 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 540 கி.மீ. தூரத்தில் இருந்தது.

இந்த புயல் சின்னம் மேலும் தீவிரம் அடைந்து கரையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசுகிறது. 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே பெரும் பாலான மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வில்லை.

புயல் சின்னம் நாளை மாலை கரையை கடக்கும். இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட பகுதிகளிலும். புதுவையிலும் பலத்த மழை பெய்யும். 250 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் தமிழ்நாட்டிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று இரவு முதல் சென்னை மற்றும் வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்யும். ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் கரையை கடக்கும்போது வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் குடிசைகள் மற்றும் வலுவற்ற கட்டிடங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் சின்னம் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

நேற்று வரை 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 50 மி.மீ., பூதப்பாண்டி, செங்கோட்டையில் 40.மி.மீ., இரணியில் 30 மி.மீ., பேச்சிப்பாறை, நாகர்கோவில், திருச்செந்தூரில் 20 மி.மீ., தென்காசி, சேரன்மாதேவி, குழித்துறையில் 10 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

நாகப்பட்டினம், சென்னை, கடலூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை, புயல் பாதிப்பை தவிர்க்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படுபவர்களை தங்க வைப்பதற்கான தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

அவசர தகவல் மற்றும் உதவி மையங்களும் அமைக்கப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கும்படியும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புயல் சின்னம் கரையை கடக்கும் போது தேவைப்பட்டால் கடலோர காவல் படை, இந்திய விமானப் படை ஆகியவற்றை அவசர உதவிக்கு அழைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

Leave a Reply