shadow

cucoo

 

தமிழ் சினிமாவில் ராஜபார்வை, காதல் ஓவியம் போன்ற விழியிழந்தோர்களுடைய காதல் காவியங்கள் பல வந்திருக்கின்றது. ஆனால் குக்கூ அந்த படங்களின் சாயல் சிறிதும் இல்லாமல் வித்தியாசமாக முழுநிறைவு தரும் படமாக இருக்கின்றது.

ஆனந்த விகடனில் வட்டியும் முதலும் என்ற விறுவிறுப்பான தொடரின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்த ராஜு முருகனின் முதல் படம். தெளிவான திரைக்கதை, அளவான வசனம், அழுத்தமான காட்சியமைப்பு போன்றவற்றின் மூலம் ஒரு திருப்தியான படத்தை கொடுத்திருக்கிறார் ராஜு முருகன். வாழ்த்துக்கள்.

அட்டக்கத்தி தினேஷ், மாளவிகா இருவரும் பார்வையற்றவர்கள். எதிர்பாராதவிதமாக ஒருவரை ஒருவரை ஒருவர் சந்திக்கும் இவர்கள் சிறுசிறு மோதல்களுக்கு பின்னர் காதல் கொள்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவுக்கு மீறி அன்பு செலுத்தி ஓசையாலும், வாசனையாலும் செய்யும் காதல் கவிதைத்தனமானது.

ஆனால் மாளவிகாவின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு மாளவிகாவை இன்னொருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அண்ணனின் சதியில் இருந்து மாளவிகா தப்பித்தாரா? தினேஷை திருமணம் செய்தாரா? என்பதுதான் இரண்டாவது பாதி கதை.

அட்டக்கத்தி தினேஷ் இயல்பான நடிப்பை தந்துள்ளார். இதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்திருப்பது அவரது நடிப்பில் தெரிகிறது. அவருக்கு இணையாக மாளவிகாவும் நடித்துள்ளார். இருவரின் காதல் காட்சிகள் மிகவும் நாகரீகமாகவும், கவிதைத்தனமாகவும் இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு இந்த காதல் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தினேஷின் நண்பர்களாக வரும் இளங்கோ, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர்களின் நடிப்பு மிக அருமை. இவர்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கின்றது.

இரண்டாவது பாதி திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறுவது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் நம்மையெல்லாம் அசத்திவிட்டார் இயக்குனர்.  நறுக்கான வசனங்கள் படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

இசை சந்தொஷ் நாராயணன். பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை மிக அருமை. கண்களை உறுத்தாத மிகத்தெளிவான ஒளிப்பதிவு.

குக்கூ…குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply