ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை முன்னேறியது. நேற்றைய லீக் போட்டியில் பிரிஸ்பேன் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. “டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பிரிஸ்பேன் அணிக்கு மைக்கேல்(0) ஏமாற்றினார். பின் பவுண்டரிகளாக விளாசிய கேப்டன் ஜேம்ஸ் ஹோப்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கிறிஸ் லின், ஜேசன் ஹோல்டர் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 6 ஓவரில் 50 ரன்களை கடந்தது.

இதற்கு பின் சென்னை “சுழலில்’ பிரிஸ்பேன் அணி வசமாக சிக்கியது. ரவிந்திர ஜடேஜாவின் முதல் ஓவரில் கிறிஸ்டியன்(3), பர்ன்ஸ்(0) அவுட்டாகினர். அஷ்வின் பந்தில் லின்(29) வெளியேறினார். ரெய்னா பந்துவீச்சில் சபார்க்(2) போல்டானார். இதையடுத்து 12.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கட்டிங், ஹார்ட்லி, சென்னை “வேகங்களை’ ஒருகை பார்த்தனர். பிராவோ ஓவரில் கட்டிங் 2 சிக்சர் அடித்தார். தொடர்ந்து ஹோல்டர் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் கட்டிங் 2 சிக்சர், ஹார்ட்லி 2 பவுண்டரி அடிக்க, 21 ரன்கள் எடுக்கப்பட்டன. ஹார்ட்லி 35 ரன்களுக்கு வெளியேறினார். பிரிஸ்பேன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. கட்டிங்(42), அவுட்டாகாமல் இருந்தார்.

போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி சேர்ந்து அசத்தல் துவக்கம் கொடுத்தனர். கானான் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் விஜய். பின் ஹாரிட்ஸ் ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், கட்டிங் பந்தில் விஜய்(42) அவுட்டானார். ரெய்னா(23), தன்பங்கிற்கு 2 சிக்சர் அடித்த கையோடு வெளியேறினார்.

அடுத்து  தோனி களமிறங்கினார். கானான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹசி, அரைசதம் கடந்தார். தனது வழக்கமான “ஸ்டைலில்’ கட்டிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தோனி, அணிக்கு வெற்றி தேடித் தந்தார். சென்னை அணி 15.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் அணி வெளியேறியது.

ஆட்டநாயகன் விருதை மைக்கேல் ஹசி வென்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *