shadow

tourசுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்கள், தனது குடும்பத்துக்கான நிதி ஆலோசனையை மேற்கொள்ளும்போது வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவதற்காகவும் சேமிப்பை ஒதுக்க வேண்டியது அவசியம்.

உள்ளூர் சுற்றுலாவுக்கு வருடம் 12,000 ரூபாய் செலவாகிறது எனக் கொண்டால், அதற்காக மாதம் 1,000 ரூபாயை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலோ அல்லது கடன் ஃபண்டுகளிலோ சேமிப்பது நல்லது. ஓராண்டு முதலீடு என்பதால் முதலீடு முதிர்வின்போது வட்டியுன் சேர்த்து பணம் திரும்பக் கிடைக்கும்.

ஆனால், இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எங்களால் மிக முக்கியமான தேவைக்கே பணத்தை சேமிக்க முடியவில்லை, சுற்றுலாவுக்கு எப்படி சேமிக்க முடியும் என்கிறவர்கள், நிச்சயம் சுற்றுலா செல்ல வேண்டும் எனும்போது கடன் பற்றி யோசிக்கலாம். ஆனால் கடன் என்கிறபோது அதற்கான வட்டி இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கிரிதரன், தனது குடும்பத்தினரோடு சமீபத்தில் 4 நாட்களுக்கு மலேசியா போய் வந்தார். தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியரான கிரிதரனால் எப்படி குடும்ப சகிதமாக வெளிநாட்டுக்குப் போய்வர முடிந்தது என்றுதானே யோசிக்கிறீர்கள்?

கிரிதரனின் வெளிநாட்டுப் பயணத்துக்கான டிக்கெட் மற்றும் தங்குவதற்கான வசதிகளை ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் செய்துவிட, இதற்கான பணத்தை கிரெடிட் கார்டு மூலம் கட்டிவிட்டார்.  இந்தப் பணத்தையும் ஒருநேரத்தில் கட்டாமல், இ.எம்.ஐ. மூலம் கட்டும் வசதி கிடைத்ததால், கிரிதரனால் நிம்மதியாக ஊர் சுற்றிப் பார்க்க முடிந்தது.

சுற்றுலாவுக்காக கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவதற்கான வழி முறைகள் என்ன, திருப்பிச் செலுத்தும் காலம் எவ்வளவு, வட்டி விகிதம் எவ்வளவு, எவ்வளவு கடன் கிடைக்கும், உத்தரவாதம் ஏதேனும் தரவேண்டுமா? என்கிற கேள்விகளுக்கு  விடை தேடி வங்கி மற்றும் ஆன்லைன் டிராவல் நிறுவனங்களிடம் பேசினோம். அவர்கள் தந்த விவரம் இங்கே உங்களுக்காக…

சுற்றுலாவுக்கு கிரெடிட் கார்டு கடன்!

பல ஆன்லைன் டிராவல் நிறுவனங்கள் பெரும்பாலான வங்கிகளிடம் டை-அப் செய்து கொண்டு விமானப் போக்குவரத்துக்கான பயணச் சீட்டை பதிவு செய்வது, சுற்றுலா செல்லும் இடங்களில் தங்கும் இடத்தைப் பதிவு செய்வது போன்றவற்றை உங்களிடம் இருக்கும் கிரெடிட் கார்டினை வைத்து செய்து தருகிறது. சில குறிப்பிட்ட வங்கிகள் தரும் கிரெடிட் கார்டுகள் உங்களிடம் இருந்தால்போதும், இந்த சுற்றுலாக் கடனை எளிதாகப் பெறலாம்.

விமானம், ரயில், பேருந்து டிக்கெட்டுகள், ஹோட்டல் செலவுகளை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திவிட்டு, அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தும்போது குறைந்தபட்சம் மூன்று மாதம் முதல் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு உள்ளாகச் செலுத்தும் இ.எம்.ஐ. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கடனை பெறுபவர்கள் தேர்வு செய்யும் திருப்பிச் செலுத்தும் கால அளவுக்கு ஏற்ப, திருப்பிச் செலுத்தும் தொகை மற்றும் வட்டி விகிதம் வித்தியாசப்படும். தவிர, வட்டி விகிதமானது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படவும் செய்யும்.

உதாரணமாக, விமான டிக்கெட்டுக்கான செலவு ரூ.35,388 என கொண்டால், இதை 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தும் இ.எம்.ஐ. வாய்ப்பைப் பயன்படுத்தும்போது மாதம் ரூ.3,346  செலுத்த வேண்டி இருக்கும். அதே தொகையை ஆறு மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தும்போது இதைவிட அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கிரெடிட் கார்டு கடனுக்கு 13-14% வட்டி விதிக்கப்படுகிறது.

சுற்றுலாக் கடன்!

மேலும், சில வங்கிகள் சுற்றுலா செல்வதற்காகவே தனிநபர் கடனை வழங்கும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது, ‘ஸ்டார் ஹாலிடே லோன்’ என்கிற திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.10,000 முதல் ரூ.2 லட்சம் வரை எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் கடன் பெற முடியும். 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பெறப் படும் கடன் தொகைக்கு உத்தரவாதம் தேவை. கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரம் போன்ற வற்றை உத்தரவாதமாகத் தரலாம். இந்த உத்தரவாதம் கடன் வாங்கும் தொகையில் 50 சதவிகித தொகை ஈடு செய்யும் விதமாக இருக்க வேண்டும். இந்தக் கடனை 2 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

எதற்கு, யாருக்கு?

இந்தக் கடன் கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்லும்போது அவர்களின் போக்குவரத்துச் செலவு (விமானம், ரயில், பேருந்து), தங்கும் இடத்துக்கான கட்டணம், இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான செலவு போன்ற வற்றுக்காக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 14%. சம்பளதாரர், சுயமாகத் தொழில் செய்பவர்கள், அதிகமான நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு இந்த சுற்றுலாக் கடன் வழங்கப்படுகிறது.

வட்டி கட்டத் தயார் என்பவர்கள் இந்தச் சுற்றுலாக் கடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

Leave a Reply