shadow

திப்புசுல்தானுக்கு எதிர்ப்பா? ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் தலைவர்
tipu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘கபாலி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இந்த படத்தை முடித்துவிவிட்டு அவர் ‘எந்திரன் 2’ படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘திப்புசுல்தான்’ கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்தி வந்தவுடனே, இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் திப்புசுல்தான் எதிரானவர் என்றும், அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியதாவது: “” இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் திரு. இராம கோபாலன் அவர்கள் 10.9.2015 அன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கையில் திப்புசுல்தான் ஒரு இந்து மத விரோதி; தமிழர் விரோதி. அவரைப் பற்றி எடுக்கும் கன்னட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது, தமிழ் திரைப்படைத்துறையினர் யாரும் அப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது, ஒருவேளை அப்படம் வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டால் அதை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் தலைவர்களில் ஒருவரான திரு. இல. கணேசன் அவர்களும் இராமகோபாலனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். படைப்பு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயலும் இராமகோபலனின் அறிக்கை மற்றும் இல. கணேசன் கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியது.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான வரலாற்றை புரட்டிப்போடுகிற, திரித்து சொல்லுகிற ஒரு வேலையை இராமகோபாலன் செய்திருக்கிறார். திப்புசுல்தான் என்றாலே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்தவர் என்பதும், மதநல்லிணக்கத்தை பேணியவர், இந்து கோயில்களை பாதுகாத்தவர் என்பதும் தான் அடையாளமாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காகவே இராமகோபாலன் முயற்சித்துள்ளார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்டத்தில் திப்புசுல்தானின் பங்கு வரலாற்று ஆசிரியர்களாலும், ஆய்வாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி 1799ம் ஆண்டு மே 4-ந் தேதி போர்க்களத்திலேயே இறந்தார்.

திப்புசுல்தான் சிருங்கேரி சங்கராச்சரியார்களுக்கு இடையேயான 30 கடிதப்போக்குவரத்துக்கள் 1916ல் தொல்லியியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. மதநல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த மன்னனாக திப்புசுல்தான் திகழ்ந்தார் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் ஆலயம் உட்பட 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்கு திப்புசுல்தான் நிரந்தரமாக தன் கஜானாவிலிருந்து பொருளுதவி செய்து கொண்டிருந்தார் என்பதும் ஆய்வாளர்களால் ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒருவரை மதவெறியனாக, தமிழர் விரோதியாக சித்தரிக்கும் ராமகோபாலனின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தியாகமோ, துரோகமோ அதற்கு மதச்சாயம் பூசுவதை தேசபக்தர்களும், மக்கள் நலன் நாடும் அமைப்புகளும், மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்களும் ஏற்கமாட்டார்கள்.

சேஷசமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் தேர் முற்றிலுமாக எரிக்கப்பட்டபோது இராமகோபாலனுக்கு கோபம் வரவில்லை. தலித்துகள் 7 பேரின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டபோது அதற்காக குரல்கொடுக்க இராமகோபாலனுக்கு நேரமில்லை. ஏனென்றால் அவர்களின் அகராதியில் தலித்துகளும் அவர்கள் வழிபடும் தெய்வங்களும் இந்துக்கள் பட்டியலில் சேராது. பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளின் மீது வாய்மூடி மௌனம் காக்கும் இத்தகைய நபர்களும், அமைப்புக்களும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் அள்ளி வீசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

எனவே தமிழக திரைப்படத் துறையினர் ராமகோபாலனின் மிரட்டல் பேச்சுக்கு செவிசாய்க்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. கருத்துச்சுதந்திரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும் என்று உறுதிபட தெரிவிக்கிறது.
இராமகோபாலனின் வன்மம் கொண்ட மேற்கண்ட அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு ஜனநாயக, மதச்சார்பற்ற எண்ணம் கொண்டோர் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளின் இத்தகைய கருத்துக்களை கண்டனம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது’

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply