shadow

amith shahபோலி என்கவுண்டர் வழக்கில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கபட்டதன் மூலம் சிபிஐ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துளன.

 கடந்த 2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக பதிவு செய்த வழக்கில் அப்போதைய  குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.
அமித்ஷா மீது கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் மனுவை ஏற்று, அவரை போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து விடுவித்து  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சி.பி.ஐ.யின் அனுமானங்கள் முழுவதும் ஏற்கக்கூடியது அல்ல என்றும் அவரை ஒரு குற்றவாளியாக கருத முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்ததீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாக சுட்டுக்கொல்லப்பட்ட சொராபுதீன் சகோதரர் ருபாபுதீன் தெரிவித்துள்ளார். அமித் ஷாவை காப்பாற்ற சிபிஐ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் அமித்ஷா விடுவிக்கப்பட்ட விவகாரத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன

Leave a Reply