shadow

costly_2545097f

ஒரு வீடு வாங்குவது என்பது இந்தியாவில் பலருக்கும் கனவு; வாழ்க்கையின் லட்சியமும், சாதனையும்கூட. இன்னும் பலர் வீடே இல்லாத நிலையில் கூடாரங்களுக்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. இதே நாட்டில்தான் மிக மிக விலை மதிப்பிலான வீடுகளும் கட்டப்படுகின்றன; வாங்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் காஸ்ட்லியான வீட்டைக் கட்டினார். உலகின் விலை மதிப்பான வீடுகளின் பட்டியலிலும் இந்த வீடு இடம் பிடித்துள்ளது. திரையரங்கம், பூங்கா, ஹெலிகாப்டர் தளம் என பலவகையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வீடு அது. எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையைப் பொங்கச் செய்திருப்பார்கள். இப்போது இந்த காஸ்லி வீடுகளின் பட்டியலில் மற்றொரு வீடு இடம் பிடித்துள்ளது. மும்பையில் உள்ள ஜாட்டியா மாளிகை அது.

மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள இந்த வீட்டை இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களுள் ஒருவரான குமார மங்களம் பிர்லா 425 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் சமீபத்தில் நடந்த விலை மதிப்பான வீடு விற்பனை இதுதான். இதற்கு முன்பு 2011-ல் இதே பகுதியில் மகேஸ்வரி இல்லம் 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மெராங்கர் இல்லம் 2014-ல் 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

25 ஆயிரம் அடி பரப்பளவு கொண்ட இந்த சொத்து லிட்டில் கிப்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த சொத்துப் பரிமாற்றம் ஜே.எல்.எல். நிறுவனம் மூலம் நடந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்தச் சொத்துப் பரிமாற்றம் குறித்து ஆதித்யா பிர்லா குழுமம் கருத்துக் கூற மறுத்துள்ளது.

Leave a Reply