shadow

EVKS speechதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுறுசுறுப்பாக தமிழகமெங்கும் சுற்று காங்கிரஸ் கொள்கைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

இந்நிலையில் திருவாரூரில் தொண்டர்களை சந்தித்து பேசிய இளங்கோவன், “இன்று தமிழக காங்கிரஸ் 4 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது. இந்த 4 சதவீத வாக்கு வங்கி 4௦ சதவீதமாக மாற்றுவோம். தமிழகத்திலே  மிகப் பெரிய வாக்கு வங்கியை பெற்றவர்கள் காமராஜர், அவருக்கு அடுத்துஎம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தோல்வி அடைந்தார். ஆனால், அதற்கு பின் வந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தார். அது போல காங்கிரஸ் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இன்னும் 15 மாதங்களில் நடக்க இருக்கிற சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்
 
காங்கிரஸ் கட்சி அழியப் போகிறது என பலர் சொல்கின்றனர்.  இது எல்லாம் பொய். வரும் வழிகளில் சாலை மிகவும் மோசமாக இருந்தது. யார் போட்ட சாலை என்று இந்த திருவாரூர் மாவட்ட செயலாளரை கேட்ட போது அவர் சொன்ன பதிலை கேட்டு நான் அதிர்ந்தேன். காமராஜர் போட்ட சாலை என்று அவர் சொன்னார். என்ன சொல்கிறீர்கள்? என்று அவரை மீண்டும் கேட்டேன். அவர் சொன்னது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்பது பின்னர் தான் எனக்கு தெரிந்தது. இன்றைக்கு காமராஜர் என்ற பெயருக்கு கூட பினாமி வைத்து கொண்டிருக்கின்றனர். இனிமேலாவது காமராஜர் என்று எழுதாமல் காமராஜ் என எழுதி பிராகெட்டில் ஆர் என எழுத சொல்லுங்கள்.

அட்டூழியம் நடப்பதை எடுத்து சொல்ல காங்கிரஸ் காரனுக்கு கடமை உள்ளது. அன்றைக்கு காமராஜர் நாட்டிற்காக போராடி சிறை சென்றார். அந்நாள் எப்படி? இந்நாள் எப்படி?. சோர்ந்து விடாதீர்கள். இன்னும் 15 மாதங்களில் நடக்க இருக்கிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். இல்லையெனில் காங்கிரஸ் உதவியின்றி எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்காது” என்றார்.

Leave a Reply