shadow

மோடி அரசில் ரூ.45 ஆயிரம் கோடி ஊழல். காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டு

modiமன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணமே தொலைத்தொடர்பு துறையில் நடந்ததாக கூறப்படும் ரூ.2 லட்சம் கோடி 2ஜி ஊழல்தான். தற்போது அதே தொலைத்தொடர்பு துறையில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியும் ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, சக்திசிங் கோகில், ஆர்.பி.என்.சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , ”ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ், ஐடியா, டாடா, ஏர்செல் ஆகிய 6 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்தார்.

தணிக்கையின் முடிவில், அவர் இந்த ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், 6 நிறுவனங்களும் 4 ஆண்டுகளில் வருவாயைக் குறைத்துக் காண்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார். அதன் விளைவாக, மத்திய அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், இந்த தணிக்கை முடிவுகளை மத்திய அரசு மறு ஆய்வு செய்து வருகிறது. அந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் தவிர்ப்பதற்கு மத்திய அரசே உதவுகிறது.

மோடி அரசின் நட்பு வட்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்த ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அரசு உரிமம் கட்டணம் செலுத்துவதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்த நிறுவனங்கள் கடன் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒளிவுமறைவின்மை பற்றி பேசும் மோடி அரசு, இந்த ஊழலை மூடி மறைக்க பார்க்கிறது. பிரதமர் மோடியின் நேரடி அல்லது மறைமுக ஒப்புதல் இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்காது. எனவே, இதற்கு வேறு அமைச்சர் மீது குற்றம் சாட்டுவது முறையற்றது. இந்த ஊழல் முறைகேட்டை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்புவோம்” என்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ”காங்கிரஸ் கட்சி கூறி இருப்பது அனைத்தும் பொய். அது, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் ஆகும். அவர்கள் சொன்ன காலகட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. அப்போதுதான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாயை குறைத்து காண்பித்தன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அபராதம் உள்பட அனைத்து பாக்கித் தொகைகளும் வசூலிக்கப்படும். அவர்களும் லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் உபயோக கட்டணம் ஆகியவற்றை செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply