shadow

p48a

விப்ரியோ காலரே’  (Vibrio cholerae) எனும் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோய்க்கு ‘காலரா’ என்று பெயர். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதித்து, உயிர்ப் பலியை உண்டாக்கும் ஒரு கொடிய நோய் இது. உலக அளவில், ஆண்டுதோறும் அதிகபட்சமாக 50 லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு காலரா ஏற்படுகிறது. பொதுச் சுகாதாரம் குறைவாகக் காணப்படுகிற நம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், காலரா நோய் திடீர் திடீரென்று ஒரு கொள்ளை நோயாகத் தோன்றுகிறது.

நோய் வரும் வழி:

காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. இந்த காலரா கிருமிகள் நோயாளியின் மலத்தில் வசிக்கும். நம் நாட்டு மக்களிடம் திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. இங்கு உட்காரும் ஈக்கள், காலரா கிருமிகளைச் சுமந்துகொண்டு, மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் உணவுக்குக் கொண்டுவருகின்றன. இந்த அசுத்தமான உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு காலரா ஏற்படுகிறது.

கழிவுநீர்க் கால்வாய்களும், சாக்கடைகளும் குளம், குட்டை, ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் கலந்து, அவற்றை அசுத்தப்படுத்துகின்றன. இந்த  நீர்நிலைகளைக் குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்துபவர் களுக்கு காலரா பரவும். இந்தியாவில் காலரா ஒரு கொள்ளை நோயாகப் பரவுவதற்கு இதுதான் காரணம்.

இவை தவிர, ‘நோய்க்கடத்துநர்’ மூலமும் காலரா பரவலாம். அதாவது, ஏற்கனவே காலரா வந்து குணமானவரின் குடலில், இந்த நோய்க்கிருமிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்துகொண்டே இருக்கும். இந்தக் கிருமிகள் மலம் மூலமாக வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ ( Carriers) என்கிறார்கள்.

அறிகுறிகள்:

திடீரெனத் தொடங்கும் அதிக வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி போன்றவை காலராவின் முக்கிய அறிகுறிகள். தண்ணீர் பீச்சி அடிப்பதுபோல் மலம் போகும். பார்ப்பதற்குச் ‘சோறு வடித்த தண்ணீர்’போல் இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்குக் காரணமாக, உடலில் உள்ள நீர்ச்சத்து மிக விரைவில் குறைந்துபோவதால், நாக்கு உலர்ந்து, தாகம் எடுக்கும். கன்னம், வயிறு ஒட்டிப்போகும். சிறுநீர் பிரிவது குறையும். மயக்கம் வரும். இதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல்போனால், மரணத்தையும் தழுவ நேரிடும்.

தடுப்பு மருந்தின் அவசியம்:

காலராவைத் தடுக்க ‘வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பு மருந்து’ (Killed oral vaccine) உள்ளது. கும்பமேளா, மதுரைச் சித்திரைத் திருவிழா, கும்பகோணம் மகாமகம் போன்ற மக்கள் கூடும் விழாக் காலங்களிலும், வறட்சிக்குப் பிறகு திடீரெனத் துவங்கும் பருவ மழைக்காலத்தின்போதும் காலரா பரவுவது உண்டு. இந்தக் காலகட்டங்களில் அனைவரும் காலரா தடுப்பு மருந்தை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொடுக்கப்படும் முறை:

குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை, இரண்டு வாரங்கள் கழித்து, இரண்டாவது தவணை என்று இரண்டு முறை இந்தத் தடுப்பு மருந்தை வாய்வழியாகக் கொடுக்க வேண்டும். இதன் அளவு ஒன்றரை மில்லி. இதற்கு ‘முதன்மைத் தடுப்பு மருந்து’ (Primary Dose) என்று பெயர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊக்குவிப்பு மருந்தாக (Booster Dose) இதை மீண்டும் ஒருமுறை கொடுக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் கொடுக்கத் தவறியவர்கள், எப்போது வேண்டுமானாலும் இதை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, காலரா பரவும் என எதிர்பார்க்கப்படும் காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும், இதை ஒரு மாதத்துக்கு முன்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், காசி, ராமேஸ்வரம், பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் போன்ற திருத்தலங்களுக்குப் பயணம் செல்பவர்கள் மற்றும் காலரா உள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள், தங்கள் பயணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே இதை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பு மருந்துக்குப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை.

காலராவை முற்றிலும் தவிர்க்க:

முற்றிலும் தடுக்கத் தடுப்பு மருந்து மட்டுமே போதாது. காரணம், இந்த மருந்தின் தடுக்கும் சக்தி 50 முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே. எனவே, மற்ற தடுப்பு வழிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். காலரா நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை தரவேண்டும். நோயாளியைக் கவனிப்பவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் தங்களையும் தற்காத்துக்கொண்டு, தங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் காலரா நோய் பரவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் அனைவரும் காலரா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாக்கடைகளை முறைப்படி சுத்தப்படுத்துவதில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தெருக்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைவரும் சுயசுத்தம் பேண வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்ததும், கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

குடிநீரை, குறைந்தது 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும். காய்கறிகளையும் பழங்களையும் நன்கு கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும், சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகளில் ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் பால் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்த பின், ஐந்து நிமிடங்களுக்குத் தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். வீடு மற்றும் தெருக்களில் சுற்றுப்புற சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.

Leave a Reply