shadow

தமிழ்நாடு பிரிமியர் லீக்: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சாம்பியன்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, தூத்துக்குடி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத் மற்றும் தலைவன் சற்குணம் களமிறங்கினர். சற்குணம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், கார்த்திக் களமிறங்கினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கோபிநாத், கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆடி ரன் குவிப்பில் இறங்கினார்.

கார்த்திக் 16 ரன்களில் கேட்சாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்டனி தாஸ் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சேப்பாக் அணியின் கேப்டன் சதிஷ் களமிறங்கினார். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய கோபிநாத் 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அதிசயராஜ் பந்துவீச்சில் ஸ்ரீனிவாஸிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் கேப்டன் சதிஷுடன் சத்யமூர்த்தி ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். சேப்பாக் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சதிஷ், சத்யமூர்த்தி இருவரும் தலா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதன்மூலம், சேப்பாக் அணி இந்தாண்டின் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக தட்டிச்சென்றது.

Leave a Reply