டிரினிடாட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அபாரமாக ஆடிய டிரினிடாட் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவில் 5வது சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த பி பிரிவு கடைசி லீக் போட்டியில், சென்னை (இந்தியா), டிரினிடாட் அன்டு டுபாகோ (மேற்கிந்திய தீவுகள்) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டிரினிடாட் அணி அணித்தலைவர் தினேஷ் ராம்தின் தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டது. முரளி விஜய் 27 ரன்களும், சுரேஷ் ரெய்னா 38 ரன்களும், அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி 25 ரன்களும் எடுத்தனர். டிரினிடாட் அணி சார்பில் ரயாத் எம்ரித் 3 விக்கெட்டும், ரவி ராம்பால், சிம்மன்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய டிரினிடாட் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லிவிஸ் 38 ரன்களும், சிம்மன்ஸ் 63 ரன்களும் எடுத்தனர். சகலதுறை வீரராக அசத்திய டிரினிடாட் அணியின் சிம்மன்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

டிரினிடாட் அணி 4 லீக் போட்டியில் 3ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் (+0.816) ரன்-ரேட் அடிப்படையில் பி பிரிவில் முதலிடம் பிடித்தது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை அணி 12 புள்ளிகளுடன் (+0.271) இரண்டாவது இடம் பெற்றது.

ஏ பிரிவில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் (+0.960) முதலிடம் பிடித்தது. நான்கில் 2 வெற்றி உட்பட 10 புள்ளிகள் (+1.068) பெற்ற மும்பை அணி, ரன்-ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் பெற்றது.

Leave a Reply