சென்னை இன்ஜினியரிங் கல்லுரி மாணவி ஒருவர் பணத்திற்காக ஒரு கும்பலால் கடத்தப்பட்ட செய்தி அறிந்து போலீஸார் தகவல் கிடைத்த எட்டு மணி நேரத்தில் கடத்தல் கும்பலை பிடித்தது பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சென்னை சாஸ்திரி நகரை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லுரி மாணவி ஒருவர் திங்கட்கிழமை காலை வழக்கம்போல் கல்லூரி பேருந்துக்காக காத்திருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கல்லூரி மாணவியை தூக்கி காரில் போட்டுக்கொண்டு கடத்தினர். மாலை ஏழு மணிவரை வீடு திரும்பாததை அறிந்த மாணவியின் பெற்றோர் கல்லூரிக்கு போன் செய்து கேட்டபோது, மாணவி கல்லூரிக்கே அன்று வரவில்லை என்ற தகவல் அவர்களை திடுக்கிட செய்தது.

பின்னர் மாணவியின் பெற்றோர் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.இந்நிலையில் கடத்தல்காரர்களில் ஒருவன் மாணவியின் தந்தைக்கு போன் செய்து, அவரது மகளை தாங்கள் தான் பணத்திற்காக கடத்தியுள்ளதாகவும், ரூ.2 கோடி பணம் கொடுத்தால் மாணவியை பத்திரமாக ஒப்படைப்பதாகவும், இல்லையேல் மாணவியை கொலை செய்து பிணத்தை அனுப்புவோம் என மிரட்டியுள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மீண்டும் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு மாணவியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

மாணவியின் தந்தையை ராமாவரத்தில் உள்ள ஒரு டீக்கடை ஒன்றுக்கு பணத்துடன் வரச்சொல்லியிருந்தான் கடத்தல்காரன். அங்கு போலீஸார் மாறுவேடத்தில் காத்திருந்து கடத்தல்காரர்கள் மூன்று பேர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்படி பல்லாவரம் அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தப்பட்ட தகவல் தெரிந்த 8 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவியை காப்பாற்றிய போலீஸார்களின் திறமையை சாஸ்திரி நகர் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply